ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த 5-ந் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த போராட்டத்துக்கு தடை விதித்ததோடு, உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டது. ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தொழிற்சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்றுக் கொள்வதாகவும், 2.57 மடங்கு ஊதிய உயர்வு, இதர படிகள் தொடர்பாக ஒரு மத்தியஸ்தரை நியமித்து இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்ட ஐகோர்ட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டும், பொதுமக்களின் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர்களை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இன்று முதல் பணிக்கு திரும்ப போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.
வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் வழக்கம் போல் ஓட துவங்கின