ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. 69 இலட்சம் மக்கள் வீதியில் இருந்து ஜனாதிபதியை சபிக்கிறார்கள்.
கோ ஹோம் கோட்டா என அழுத்தமாக குறிப்பிடுகிறார்கள். நாங்கள் சர்வ கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணைய தயார் அதற்கு முன்னர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.
எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் கடந்த வாரம் கத்தார் சென்றார். சென்றதன் பின்னர் தான் . கட்டாரிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது என்றார்
இதன்போது குறுக்கிட்ட வலுசக்தி அமைச்ச் கஞ்சன விஜேசேகர தவறான விடயத்தை சமூகமயப்படுத்த வேண்டாம். கட்டார் நாட்டு ஜனாதிபதியின் அழைப்பிற்கமையவே விஜயத்தை மேற்கொண்டோம்.
நாட்டில் தற்போது நெருக்கடிக்குள்ளாகி உள்ள எரிபொரு,எரிவாயு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
பெற்றோல் மற்றும் விமான எண்ணெய் வழங்கப்படமாட்டாது என்பதை மாத்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் டீசல், உராய்வு எண்ணெய் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதாக கட்டார் குறிப்பிட்டுள்ளது. ஆகவே தவறான விடயங்களை சமூக மயப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டார் என்றார்
தொடர்ந்து உரையாற்றிய நளின் பெர்னான்டோ.. எரிபொருள் இறக்குமதி தொடர்பில் குறிப்பிடப்படுகிறது. சகல நெருக்கடிகளுக்கும் மூலகர்த்தாவான தலைமையாக வைத்துக் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேசப்படுகிறது.
ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஸ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்தை தூய்மைப்படுத்துபவர்களாக செயற்படுகிறார்கள்.
கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார்கள். நாடு தீப்பற்றி எரியும் வகையில் நெருக்கடிகளை தீவிரப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்டு எப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மக்களாணை உண்டு என ஆளும்தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.69 இலட்சம் மக்கள் வீதியில் உள்ளார்கள்,ஜனாதிபதியை சபிக்கிறார்கள். அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 3 சதவீதமாக காணப்படுகிறது.
மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைய தயார். ஆனால் நெருக்கடிகளின் நிர்மாணிப்பாளரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். நாட்டு மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றார்.