நாட்டின் 69வது குடியரசு தினவிழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றினார்.
விழாவில், பிரதமர் மோடி, ஆசியான் நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் 69வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டெல்லியில் குடியரசு தின விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழாவில் ஆசியான் கூட்டமைப்பை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தாய்லாந்து பிரதமர் சான் ஓ சா, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ, சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங், புருனே மன்னர் ஹாஜி ஹஸ்ஸானல், லாவோஸ் பிரதமர் தோங்லூன், மியான்மர் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகி, கம்போடிய பிரதமர் ஹன் சென், மலேசியா பிரதமர் முகமது நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் டோட்ரிகோ, வியட்நாம் பிரதமர் குயென் யுவான் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியான் நாட்டினரை கவுரவிக்கும் வகையில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 10 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.
விழாவுக்கென பிரத்யேகமாக குண்டுகள் துளைக்காத மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த விமானப்படையை சேர்ந்த கமாண்டோ நிராலாவுக்கு இந்தாண்டுக்கான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. விருதை அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி வழங்கினார்.
ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்றபின் நடக்கும் குடியரசு தினவிழா இதுவாகும். இதையடுத்து, ராஜபாதையில் அணிவகுப்பும், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாநிலங்களின் கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இந்திய ராணுவத்தின் பலத்ைத காட்டும் வகையில் பல்வேறு படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
முன்னதாக, பிரதமர் மோடி, நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடமான அமர்ஜவான் ஜோதியில், வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைகளின் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
விழாவையொட்டி, தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
வெடிகுண்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். டெல்லியை சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தீவிரவாதிகள் வான்வெளி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அசம்பாவிதங்களை தடுக்க விமானப்படை தயார் நிலையில் இருந்தது.
டெல்லியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.