அறிமுக போட்டியில் சதம் விளாசல்: சாதனை படைத்தார் கே.எல்.ராகுல்
ஹராரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் யஜூவேந்திரா ஷாகல், கருண் நாயர், கே.எல்.ராகுல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியை 49.5 ஓவரில் 168 ரன்களுக்குள் சுருட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உதவினார்.
பும்ரா 28 ரன்களுக்கு 4 விக்கெட் வீழ்த்தினார். தொடக்க ஓவர்களை வீசிய பரிந்தர் ஷரண், தவால் குல்கர்னி ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜிம்பாப்வே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர்.
மூர் 3, ஷிபாபா 13, ஹமில்டன் மசகட்ஸா 14, ஷிபந்தா 5 ஆகிய ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை மட்டுமே எடுத்து ஜிம்பாப்வே தத்தளித்தது. நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல், யஜூவேந்திரா ஷாகல் நெருக்கடி கொடுத்தனர்.
இந்த ஜோடி 20 ஓவர்களை வீசி 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரு விக்கெட்டையும் கைப்பற்றியது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்ச மாக எல்டன் சிக்கும்புரா 41, சிகந்தர் ராஸா 23 ரன்கள் எடுத்தனர். 169 ரன் கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 42.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சாதனை
கே.எல்.ராகுல் 115 பந்துகளில், 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். உலக அளவில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 11-வது வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார். அம்பாட்டி ராயுடு 120 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.