இந்தியாவின் பத்தியாலாவில் நடைபெற்றவருகின்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கிடையிலான மெய்வல்லநர் போட்டியில் இலங்கை நேற்று மற்றும் இன்றைய தினங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டன.
பெண்களுக்கான 100 மீற்றர் சட்ட வேலி ஓட்டப்போட்டியில் பங்கேற்ற லக்சிக்கா சுகந்த வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
நேற்றைய தினம் நடைபெற்ற பெண்களுக்கான 4 தர 100 மீற்றர் அஞ்சலோட்ட தெரிவுப் போட்டியில் அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சன், ஷபியா யாமிக், மெதானி ஜயமான்ன ஆகியோர் இலங்கை சார்பாக பங்கேற்றிருந்தனர்.
இதில் பங்கேற்ற இலங்கை மகளிர் அஞ்சலோட்ட அணி 45.30 செக்கன்களில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எனினும், இலங்கை மகளிர் அஞ்சலோட்ட அணியினர் கோள் பரிமாற்றங்களின்போது தவறுகளை இழைத்திருக்காவிட்டால் இதைவிடவும் சிறந்த நேரப் பெறுதியில் நிறைவு செய்திருக்கலாம். இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 29 ஆவது திகதியன்று நடைபெறும்.
பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலிப் போட்டியை 13.90 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கையின் லக்சிக்கா சுகந்தி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். லக்சிக்கா சுகந்தி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தபோதும் போட்டியின் பாதி தூரத்தை கடக்கும்வேளையில், லக்சிக்காவை முந்திக்கொண்ட தமிழக மாநிலத்தைச் சேர்ந்த சீ. கனிமொழி 13.66 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தையும், தெலுங்கானா மாநிலத்தின் அகசரா நந்தினி 13.70 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இதேவேளை, இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டிக்கான முதலாவது தெரிவுப் போட்டியில் பங்கேற்ற ஷெலிண்டா ஜென்சன் 12.05 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றார். 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் 3 ஆவது தெரிவுப் போட்டியில் 2018 இல் நடைபெற்ற தெற்காசிய இளையோர் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற அமாஷா டி சில்வா 11.64 செக்கன்களில் ஓடி முதலிடத்தை பிடித்தார். இப்போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் இரவு 7.55 மணிக்கு நடைபெறும்.