இலங்கையுடன் மூவகை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா எதிர்வரும் ஜூன் மாதம் இங்கு வருகை தரவுள்ளது.
இலங்கைக்கு 6 வருடங்களின் பின்னர் விஜயம் செய்யும் அவுஸ்திரேலியா இங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
இருபது 20 தொடருடன் ஆரம்பமாகி டெஸ்ட் தொடருடன் நிறைவடையவுள்ள இப்போட்டிகள் கொழும்பு, கண்டி, காலி ஆகிய விளையாட்டரங்குகளில் நடைபெறவுள்ளன.
‘இந்த வருட முற்பகுதியில் இலங்கையுடன் போட்டித்தன்மை மிக்க இருபது 20 தொடரில் விளையாடி இருந்தோம்.
இந்நிலையில் 2016க்குப் பின்னர் அங்கு முதல் தடவையாக செல்வது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது’ என கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் ஹோக்லி தெரிவித்தார்.
‘உப கண்டத்தை விட சவால் தரக்கூடிய வேறு இடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு இல்லை.
எனவே இந்த விஜயம் எமது வீரர்களுக்கு விலைமதிப்பில்லா அனுபவத்தை தருவதுடன் உலக அரங்கில் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
2016 இங்கு வருகை தந்த அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 0 – 3 என முழுமையாக தோல்வி அடைந்த போதிலும் சர்வதேச ஒருநாள் தொடரை 4 – 1 எனவும் சர்வதேச இருபது 20 தொடரை 2 – 0 எனவும் கைப்பற்றியது.
‘அவுஸ்திரேலியா ஐந்து (6) வருடங்களின் பின்னர் இங்கு வருகை தருவது எமக்கு பரபரப்பை தருகிறது.
இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு எமது அணியைத் தயார்படுத்த சர்வதேச இருபது 20 தொடர் உதவும்’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
போட்டி விபரங்கள் :
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 7, 8, 11ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 14, 16ஆம் திகதிகளில் கண்டியிலும் ஜூன் 19, 21, 24ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறும்.
இரண்டு டெஸ்ட போட்டிகளும் காலியில் நடைபெறும். முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 29ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 8ஆம் திகதியும் ஆரம்பமாகும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]