குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வளர்மதி ஹைகோர்ட் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சிறை வாசலில் அவருக்கு தாரை தப்பட்டையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக, போராட்டம் நடத்திவருபவர்களுக்கு ஆதரவாகப் போராடி வருபவர். இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும்போது மாணவர்கள் பிரச்னைக்காக போராடி வளர்மதி சிறைசென்றுள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கக்கூடாது என்பதற்காக போராட்டம் நடைபெற்றபோது, அனைவருக்கும் துண்டறிக்கை பிரச்சாரம் செய்தார். அதனால் குளித்தலையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இவரை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் பரிசோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியதாக, விடுதலையானதும் தெரிவித்தார். சிறைத்துறையினரின் இந்தச்செயல் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
குண்டர் சட்டம் இந்நிலையில் கடந்த ஜீலை மாதம் சேலம் அருகே கல்லூரி முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை மூலம் பிரசாரம் செய்துவந்தார். அப்போது மாணவர்களிடையே கிளர்ச்சி ஏற்படுத்துவதாகக் கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். ஆனால் 3 நாட்களுக்குப் பிறகு அவர் மீது குண்டர் சட்டம் பாய்வதாக சேலம் காவல்துறை ஆணையர் அறிவித்தார். காவல்துறை, அரசின் இந்த முடிவை அனைவருமே கடுமையாக விமர்சித்தனர்.
ரத்து செய்த ஹைகோர்ட் இந்நிலையில் வளர்மதியின் தந்தை மாதையன் அனுமதி பெற்று அமைதியான வழியில் போராடிய தன் மகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வள்ரமதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
தாரை தப்பட்டையுடன் வரவேற்பு இதனையடுத்து வளர்மதி இன்று கோவை மத்திய சிறையில் இருந்து 59 நாட்களுக்குப் பிறகு வெளிவந்தார். சிறையில் இருந்து புன்னகைத்தபடியே வந்த வளர்மதிக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.
சிறை வாசலிலேயே முழங்கிய வளர்மதி சிறையில் அடைபட்டிருந்தாலும் சினம் குறையவில்லை என்பது போல வெளியே வந்த வளர்மதி சிறை வாசலிலேயே தம்மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து கோஷமிட்டார். மக்களுக்காக போராடினால் குண்டர் சட்டமா, தீவிரவாதி பட்டமா என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.
நீட் தேர்வை எதிர்ப்போம் அரசின் அடக்குமுறையையும், காவல்துறையின் பொய்வழக்கையும் உடைத்தெறிவோம். ஹைட்ரோகார்பன் திட்டம், நீட் தகுதித் தேர்வை கண்டிப்போம். நீட் தகுதித் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம், அனிதாவின் மரணம் தற்கொலையல்ல படுகொலை என்றும் வளர்மதி முழங்கினார்.