இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு முன்னரே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யும் கறுப்பு சந்தைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அதன் பின்னர் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் , இதுவரையிலும் தட்டுப்பாடு முடிவுக்குவரவில்லை.
இதன் காரணமாக அரச நிறுவனங்களிலுள்ள சிற்றுண்டிசாலைகளில் கூட தேநீர் விநியோகத்தை நாம் இடைநிறுத்தியுள்ளோம்.
எனினும் தற்போது மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே பால்மா விநியோகிக்கப்படுமாயின் ஒரு கோப்பை தேநீரின் விலையை 100 ரூபாவாக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதன் பின்னர் தேநீர் விலை அதிகரிக்கப்பட மாட்டாது. பால்மா விலை குறைவடைந்தால் தேநீர் விலையும் குறைவடையும். இதே வேளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையும் யாருடைய அனுமதியும் இன்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யும் பால்மாவை பக்கட்டுக்களில் அடைத்து உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்கின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிப்பிற்கு முன்னரே , உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலை எவ்வாறு 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு பால்மாவின் விலையைக்குறைக்குமாறு கோருகின்றோம்.
சமையல் எரிவாயு, சீனி மற்றும் தேயிலை என்பவற்றின் விலை அதிகரித்துள்ளமையால் தேநீர் விலை அதிகரிப்பை எம்மால் தவிர்க்க முடியாது.
சமையல் எரிவாயுவை 5000 ரூபாவிற்கு விற்கும் கறுப்பு சந்தைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
எமக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் புலனாய்வு பிரிவினர் அவை தொடர்பில் அவதானம் செலுத்துவதில்லை.
எதிர்வரும் ஒரு வருடத்திற்கு சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது. எனினும் மூலப்பொருட்களின் விலை குறைவடையுமாயின் , தேநீர் விலையும் குறைவடையும் என்றார்.