விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து நடத்திவரும் 47ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான கூடைப்பந்தாட்டத்தில் இருபாலாரிலும் வட மாகாண அணிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதித்தன.
கொழும்பு சுகததாச அரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் இருபாலாரிலும் மேல் மாகாண அணிகள் சம்பியனாகின.
தங்கப் பதக்கங்களை சுவீகரித்தன. மேல் மாகாண அணிகளில் பல தேசிய வீரர்கள், வீராங்கனைகள் இடம்பெற்றமை அவ்வணிகளுக்கு அனுகூலமான முடிவுகள் கிட்ட ஏதுவாக இருந்தது.
பெண்கள் பிரிவில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணியினர் முதலாவது அரை இறுதிப் போட்டியில் தென் மாகாண அணியை 95 – 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றைய அரை இறுதியில் மத்திய மாகாண அணியை 103 – 16 என்ற புள்ளிகள் அடிப்படையில் மேல் மாகாணம் வெற்றிகொண்டிருந்தது.
இறுதிப் போட்டியில் மேல் மாகாண அணிக்கு சவாலாக விளையாடிய வட மாகாண அணி 41 – 97 புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
ஆண்கள் பிரிவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அரை இறுதிப் போட்டியில் வடமேல் மாகாண அணியை 69 – 68 என்ற புள்ளிகள் கணக்கில் வட மாகாண அணி வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
2ஆவது அரை இறுதியில் கிழக்கு மாகாணத்தை மிக இலகுவாக 106 – 48 என்ற புள்ளிகள் அடிப்படையில் மேல் மாகாணம் வெற்றிகொண்டிருந்தது.
இறுதிப் போட்டியில் வட மாகாண அணியை எதிர்கொண்ட மேல் மாகாண அணி 108 – 69 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
வட மாகாண அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இந்த சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தசுன் நிலன்த மெண்டிஸ் (மேல் மாகாணம்), பெண்கள் பிரிவில் அஞ்சலி ஏக்கநாயக்க (மேல் மாகாணம்) ஆகியோர் முறையே அதிசிறந்த விரராகவும் வீராங்கனையாகவும் தெரிவாகினர்.