41 ஆண்டுகளில் முதல் தோல்வி.. மீண்டு வந்து மிரட்டிய போர்த்துக்கல்: சுவாரஸ்ய துளிகள்
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது.
இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தில் தான் போர்த்துக்கலுக்கு இந்த வெற்றி கிட்டியது.
இதன் மூலம் ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் ஒரே தொடரில் மூன்று ஆட்டங்களில் கூடுதல் நேரத்தில் வெற்றி கண்ட அணி என்ற பெருமையும் போர்த்துக்கலுக்கு கிடைத்திருக்கிறது.
முன்னதாக 2வது சுற்றில் குரோஷியாவையும், காலிறுதியில் போலந்தையும் எதிர்த்து ஆடிய ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் அணியிடம் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியிருந்த போர்த்துக்கல் அணி, அந்த தோல்விப்பயணத்துக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், பிரான்ஸ் அணி, போர்த்துக்கலிடம் தோல்வி அடைவது கடந்த 41 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்.
தனது முதலாவது மகுடத்தை சூடுவதற்காக போர்த்துக்கல் அணி 35 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ கடைசியாக பங்கேற்ற 15 போட்டிகளில் (கிளப், தேசிய அணி) ஒன்றில் கூட தோற்கவில்லை.
மேலும், இறுதிப் போட்டியில் தோற்றது மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரான்சின் கிரீஸ்மன் தங்க ஷூ வென்றார்.
அதேவேளை வெற்றி கிண்ணத்தை முத்தமிட்ட போர்த்துக்கல் அணித்தலைவர் ரொனால்டோவுக்கு வெள்ளி ஷூ கிடைத்தது.