திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுற்றுப்பிராகார மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பலியானதைத் தொடர்ந்து, சேதமடைந்த சுற்றுப் பிராகாரம் இடிக்கும் பணி இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி வள்ளிக் குகைக்கு எதிர்பகுதியில் கிழக்குப் பகுதிக்கு திரும்பும் பகுதியில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மோர் விற்றுக்கொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம், திருப்பூரைச் சேர்ந்த கந்தசாமி ஆகிய இரு பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த 1974-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத்தேவர், ரூ.5 லட்சம் செலவில் தன் சொந்த நிதியில் கட்டித்தரப்பட்ட மண்டபம் இது. 545 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் 5.60 மீட்டர் உயரமும் கொண்டது. 34 பெரிய தூண்கள் உட்பட 196 தூண்கள் உள்ளன. “கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எவ்வித பராமரிப்பும் செய்யாததால்தான் இந்த மண்டபம் இடிந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்துக்கு முழுக்காரணம் அறநிலையத்துறையின் அலட்சியப்போக்குதான்” என பல அமைப்பினர்களும், பல கட்சித் தலைவர்களும் புகார் கூறினர். விபத்துக்குள்ளான பகுதியை ஆய்வுசெய்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், “சேதமடைந்த சுற்றுப் பிராகார மண்டபம் அகற்றப்பட்டு புதிய மண்டபம் கட்டப்படும்” என்றார்.
தமிழக அறநிலையத்துறை மதுரை மண்டல கட்டுமான நிர்வாகப் பொறியாளர் வெண்ணிலா தலைமையிலான குழு பிராகார மண்டபத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் கம்பிகளின் தன்மை, தூண்களின் எடை, இடைவெளி, ஆழம் ஆகியவை குறித்து ஆய்வுசெய்யப்பட்டன. ’சுற்றுப்பிராகார மண்டபத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய மண்டபம் கட்ட வேண்டும்’ என ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சுற்றுப்பிராகார மண்டபத்தை இடிப்பதற்கு திருக்கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டன.
சேதமடைந்த மண்டபத்தை இடிப்பதற்கு பெங்களூருவிலிருந்து பொக்லைன் மற்றும் ஜே.சி.பி.க்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. சுற்றுப் பிராகாரம் இடிக்கும் பணி இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியுள்ளது. இப்பணி இன்னும் 5 நாள்கள் வரை நடைபெறும். இதற்காக தீயணைப்பு மீட்பு பணியினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சுற்றுப்பிராகார மண்டப பகுதிக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப் பிராகார மண்டபப் பகுதியிலுள்ள 86 கடைகளை காலி செய்யுமாறு திருக்கோயில் தேவஸ்தானம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கடையைக் காலி செய்வதற்கு தடைகோரி வியாபாரிகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.