கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை 37.7 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.245 கோடி)க்கு ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங்கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதை வாங்கியவர் யார் என்ற விவரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
இந்த கோப்பையின் தொடக்க விலையாக ரூ.66 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் போன் மூலம் கேட்கப்பட்டது. போட்டி கடுமையாக இருந்ததால் ஏலம் 20 நிமிட நேரம் நடந்தது. இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக 36.3 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.233 கோடி)க்கு ஏலம் போனது. தற்போது அந்த சாதனையை இக்கோப்பை முறியடித்துள்ளது.