விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யில் 23 வருடங்களுக்கு பிறகு மிகவும் வயதான வீராங்கனையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்.
விம்பிள்டன் டென்னிஸ் கால் இறுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் போராடி 13-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலேனா ஒஸ்டா பென்கோவாவை வீழ்த்தினார்.
37 வயதான வீனஸ் வில்லியம்ஸ் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் 23 வருடங்களுக்குப் பிறகு மிகவும் வயதான வீராங்கனையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1994-ல் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா நவரத்திலோவா தனது 38 வயதில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.
அரை இறுதியில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டாவுடன் மோதுகிறார் வீனஸ் வில்லியம்ஸ். 5 முறை சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் கூறும்போது, “விம்பிள்டன் போட்டியை நான் மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் கடினமாக முயற்சிகள் செய்கிறேன். முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துகிறேன். இது மிகவும் அழகான விளையாட்டு, எனக்கு சிறப்பாகவும் அமைந்துள்ளது” என்றார்.