இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 345 ஓட்டங்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சில் தாக்குப் பிடிக்கா முடியாத இந்தியா 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.
ரோரி பேர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி இந்திய அணியினரின் பந்து வீச்சுகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டனர்.
இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இங்கிலாந்து 135 ஓட்டம் எடுத்த நிலையில் ரோரி பேர்ன்ஸ் 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹசீப் ஹமீத் 68 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய தாவித் மலான், ஜோ ரூட்டுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஜோடி 139 ஓட்டங்களை சேர்த்தது. தாவித் மலான் 70 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோ ரூட் சிறப்பாக ஆடி சதமடித்து 121 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பெயர்ஸ்டோவ் 29 ஓட்டம், ஜோஸ் பட்லர் 7 ஓட்டம், மொய்ன் அலி 8 ஓட்டம், சாம் கர்ரன் 15 ஓட்டம் எடுத்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 423 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் என்ற நிலையில் இங்கிலாந்து 345 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.