தேர்தல் நடத்தப்படாததாலும், நிர்வாகச் சிக்கல்ககள் நிலவுவதாலும் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நான்கு தேசிய விளையாட்டுத்துறை சங்கங்களில் மூன்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான திகதிகளை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், (நெட்போல்), இலங்கை சைக்கிளோட்ட சங்கம், சிலோன் ஒட்டோமொபைல் சங்கம் ஆகியவற்றின் தேர்தல்களை ஜூலை 24, 25ஆம் திகதிகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஷெமால் பெர்னாண்டோ ஈடுபட்டுள்ளார்.
இந்த மூன்று சங்கங்களிலும் நிருவாக சபைக்கு போட்டியிடவுள்ளவர்களிடம் இருந்து வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இம் மாதம் 28ஆம் திகதி நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனநாயக ரீதியில் ஸ்ரீலங்கா றக்பி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக வேர்ல்ட் றக்பி (உலக றக்பி), ஏஷியன் றக்பி (ஆசிய றக்பி) நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறப்பிட்டார்.
எனினும் ஸ்ரீலங்கா றக்பியுடன் தொடர்புடைய சில பிரதிநிதிகள் ஆட்சேபனை எழுப்பியதை அடுத்து சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய ஸ்ரீலங்கா றக்பிக்கு விசேட பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விசேட பொதுக்கூட்டம் விளையாட்டுத்துறை அமைச்சில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேர்ல்ட் றக்பி, ஏஷியன் றக்பி ஆகிய நிறுவனங்களின் யாப்பு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இந்த யோசனைகள் நிறைவேற்றபட்டதும் அதற்கமைய தெர்தல்களை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்ததாக பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.
அதன் பின்னர் போலி காரணங்களை யாரும் முன்வைக்க மாட்டார்கள் என்பதாலும் வேண்டுமென்றே ஆட்செபனைகளை சமர்ப்பிக்க மாட்டார்கள் என்பதாலும் தேர்தலுக்கான திகதியை விளையாட்டுத்துறை பணிப்பாளர்நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும்.
ஸ்ரீலங்கா றக்பி யூனியனில் அங்கம் வகிக்கும் றக்பி கழகங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என வேர்ல்ட் றக்பி மற்றும் ஏஷியன் றக்பி ஆகியன விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தெரிவித்திருந்தன. இந்த விடயங்கள் அவற்றின் யாப்பு விதிகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், முறையாக செயல்படாமல் பெயரளவில் மாத்திரம் இயங்கும் சில சங்கங்கள் தங்களது சுயலாபத்தைக் கருத்தில்கொண்டு புதிய யாப்பு விதிகளின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பாமல் ஆட்சேபனைகளை எழுப்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே சட்ட ஆலோசனைகளின் பிரகாரம் ஸ்ரீலங்கா றக்பியின் விசேட பொதுச்சபைக் கூட்டம் தொடர்பான விளம்பரத்தை பத்திரிகைகளில் பிரசுரித்து கூட்டத்தை நடத்த விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.
மற்றைய மூன்று சங்கங்களின் தேர்தல்களை முன்னிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி சரத் எதிரிசிங்க தலைமையில் தேர்தல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவில் மேலதிக செயலாளராக இருந்த பத்மஜின சிறிவர்தன, மொறட்டுவை பல்கலைக்கழக விளையாட்டுத்துறை பணிப்பாளர் சி. டி. ரத்னமுதலி, களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஐ. எம். ரணசிங்க மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என். ஏ. டி. ஜயசிங்க ஆகியோர் தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசேட பொதுக்கூட்டத்தின்போது தேர்தல் குழு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தும் முழு அதிகாரம் தேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
அதன் பின்னர், தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் தேர்தல் குழுவுக்கு வழங்கப்படும்.