பங்களாதேஷ் அணியுடனான 3 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருந்தபோதிலும், 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வசே ஒருநாள் போட்டித் தொடர் கடந்த முதலாம் திகதியன்று பங்களாதேஷின் மிர்பூரில் ஆரம்பமானது. முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றி ஈட்டிய இங்கிலாந்து 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், நேற்றைய தினம் பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற 3 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி 50 ஒட்டங்களால் இலகு வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு ஷகிப் அல் ஹசனின் சகலதுறை ஆட்டம் பெரிதும் உதவி இருந்தது.
துடுப்பாட்டத்தில் 75 ஓட்டங்களை விளாசிய ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து அணியின் ரெஹான் அஹமத்தின் விக்கெட்டை வீழ்த்திய ஷகிப், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும், சனத் ஜயசூரிய, ஷஹிட் அப்ரிடி ஆகியோருக்கு அடுத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6,000 ஓட்டங்கள் அடித்தும் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய 3 ஆவது வீரராகவும் பதிவானார்.