ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் விலை 35 ரூபாவினாலும் , டீசல் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனம் ஐந்தாவது முறையாக இவ்வாறு எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஐ.ஓ.சி. நிறுவனம் பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 50 ரூபாவினாலும், டீசல் லீற்றரொன்றின் விலையை 75 ரூபாவினாலும் அதிகரித்திருந்தது. விலை அதிகரிப்பிற்கமைய ஒக்டேன் 95 ரக பெற்றோல் 283 ரூபாவிற்கும் , யூரோ 3 பெற்றோல் லீற்றரொன்றின் விலை 263 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும், சுப்பர் டீசல் 249 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து மார்ச் 12 ஆம் திகதி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 77 ரூபாவினாலும் , ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 76 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலையை 55 ரூபாவினாலும் , சுப்பர் டீசலின் விலையை 95 ரூபாவினாலும் அதிகரித்தது.
கடந்த கால விலை அதிகரிப்புக்களின் பின்னர் ஐ.ஓ.சி. நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலினை 338 ரூபாவிற்கும் , சிபெட்கோ நிறுவனம் 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தன. இதே போன்று ஒக்டேன் 95 பெற்றோலினை ஐ.ஓ.சி. நிறுவனம் 367 ரூபாவிற்கும் , சிபெட்கோ 283 ரூபாவிற்கும் விற்பனை செய்தன.
மேலும் ஒட்டோ டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 289 ரூபாவிற்கும் , சிபெட்கோ 276 ரூபாவிற்கும் , சுப்பர் டீசலை ஐ.ஓ.சி. நிறுவனம் 327 ரூபாவிற்கும் , சிபெட்கோ 254 ரூபாவிற்கும் விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]