3 குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை- சிறுநீரகத்தை விற்க முயலும் பரிதாபம்
குஜராத் மாநிலத்தில் மூன்று குண்டு குழந்தைகளின் எடையை குறைக்க முடியாமல் தவிக்கும் தந்தை, அவர்களின் அறுவை சிகிச்சைக்காக தனது சிறுநீரகத்தை விற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் உனாவ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நந்த்வனா (வயது 35). இவருடைய மனைவி பிரக்னா பென். இந்த தம்பதியருக்கு பாவிகா, அனிஷா என 2 மகள்களும், யோகிதா, ஹர்ஷ் என்னும் 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் பாவிகா தவிர மற்ற மூவருமே குண்டு குழந்தைகள். 4 வயதாகும் அனிஷா மெகா குண்டாக காட்சி அளிக்கிறார். இவருடைய எடை 56 கிலோ. யோகிதா(5) 37 கிலோ எடையும், கடைக்குட்டியான ஹர்ஷ்(3) 20 கிலோ எடையும் உள்ளனர்.
கைக்குழந்தை பருவத்திலேயே 3 பேரும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடத் தொடங்கியதன் விளைவு ஒரு வயதை கடப்பதற்கு உள்ளாகவே 12 கிலோ எடையை சர்வசாதாரணமாக கடந்து விட்டனர். தற்போது உலகிலேயே அதிக குண்டு குழந்தைகள் கொண்ட குடும்பம் என்ற சாதனைக்கும் உரியவர்களாகி விட்டனர்.
ஒவ்வொரு மாதமும் இவர்களின் உணவுத் தேவைக்காக மட்டுமே ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக தேவைப்படுவதால் நந்த்வனாவின் குடும்பம் வறுமையில் தள்ளாடத் தொடங்கியது. இவர்களின் பசிப்பிணியை போக்கிட அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற தகவல் கடந்த ஆண்டு ஊடகங்களில் பரவியது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மூவருக்கும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.
சிகிச்சை முடிந்து சில மாதங்கள் வரை இவர்களின் உடல் கட்டுக் கோப்பாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மூவரும் மீண்டும் குண்டாகித் தொடங்கி விட்டனர். இதனால் நந்த்வனாவின் நிலைமை மறுபடியும் படுசிக்கலாகி விட்டது. குழந்தைகளின் உடல் எடையை குறைக்க சிறப்பு அறுவைசிகிச்சை மருத்துவர்களை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
குண்டு குழந்தைகள் குறித்து அவர் கூறும்போது, ‘‘இவர்களால் ஒரு நிமிடம் கூட பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது. குண்டாகிவிட்டதால் இவர்களால் நகரக் கூட முடியவில்லை. எனது மனைவிக்கு சமையல் அறையே வசிப்பறையாகிப் போய்விட்டது. இவர்கள் எடை அதிகரிக்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. என் கண் முன்பே இவர்கள் சாவதை விரும்பவில்லை. எனவே, எனது சிறுநீரகத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் இவர்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’’ என்கிறார்.