நாட்டில் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், எதிர்வரும் 7 ஆம் திகதியன்று கொழும்பு குதிரைப் பந்தய விளையாட்டு கட்டடத் தொகுதியில் நடைபெறவிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் மூன்றாவது தடவையாகவும் பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட 64 கால்பந்தாட்ட சம்மேளனங்களிலிருந்து 192 பேர் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டில் அனைத்து பாகங்களில் உள்ளவர்களை கொழும்புக்கு கொண்டுவந்து தேர்தலை நடத்துவது சிரமமான காரியம் என சுகாதார பிரிவு கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு தெரிவித்துள்ளமையே தேர்தலை நடத்த முடியாமைக்கான காரணம் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவிக்கிறது.
இலங்கை கால்பந்தாட்ட யாப்பின்படி இரகசிய வாக்கெடுப்பின் படியே தேர்தல் நடத்த வேண்டுமென்பதால் ‘சூம்’ தொழிநுட்ப வசதியை கையாள்வது சாத்தியமாகாது என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.