மலையாள சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் எம்.ஏ.நிஷாத். பெரும்பாலும் பிரபு, பசுபதி என தமிழ் நடிகர்களையும் தமிழ்-மலையாளம் இணைந்த படங்களையும் உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர். தற்போது இவர் ‘கிணர்’ (கிணறு) என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் ‘கேணி’ என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இது சின்ன பட்ஜெட் படம் என்றாலும், குடிதண்ணீர் பிரச்சனை குறித்த விழிப்புணர்வு படம் என்பதால் இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு படத்தை பிரபலத்தப்படுத்த புதிய ஐடியாவை யோசித்தார் இயக்குனர் நிஷாத்.
அந்த யோசனை தான் காந்தக்குரல்களுக்கு சொந்தக்காரர்களான யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் 26 வரும் கழித்து ஒன்றாக இணைத்து ஒரு பாடலை பாடவைத்துள்ளது. ஆம். கடந்த 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய ‘காட்டுக்குயிலு’ பாடல் எந்த அளவுக்கு ஹிட் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதன்பின் இந்த இரண்டு ஜாம்பவான்களும் இப்போது தான் மீண்டும் இணைந்து பாடுகின்றனர்.
எம்.ஜெயச்சந்திரன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் இன்னொரு ஆச்சர்யம் இந்தப்பாடல் வரிகளில் தமிழும் மலையாளமும் கலந்தே வருகின்றன. தமிழ் வரிகளை பாடலாசிரியர் பழனிபாரதியும் மலையாள வரிகளை ஹரிநாராயணனும் எழுதியுள்ளனர். “தமிழில் இருந்து பிறந்தது தான் மலையாளம். அதை யாரும் மறுக்க முடியாது. அதனால் இப்படி ஒரு பாடலை இரண்டு மொழிகளிலும் வைக்கும் எண்ணம் தோன்றியது” என்கிறார் இயக்குனர் நிஷாத்.