உலகின் அதிக எடை கொண்டவர் என்பதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மெக்சிகோ இளைஞர், தனது எடையில் 250 கிலோவை போராடி குறைத்துள்ளார்.
மெக்சிகோவில் உள்ள அகுவாஸ்கேலினேட் பகுதியை சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ. வயது 33. கடந்த 2016-ம் ஆண்டு 595 கிலோ எடை இருந்த பிராங்கோ, உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
எப்போதும் படுக்கையிலேயே இருந்த பிராங்கோவுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நுரையீரல் பிரச்னை ஆகியவை அதிகமாக இருந்தது. உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் உயிர்வாழ முடியும் என டாக்டர்கள் கூறியதையடுத்து தந்த சொந்த மாநிலத்தில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள கவுடலராஜாவுக்கு குடிபெயர்ந்தனர்.
அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. பின்னர், இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தொப்பையை குறைக்கவும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
பின்னர் அவருக்காகவே பிரத்யேகமாக உடற்பயிற்சி கருவிகள் வடிவமைக்கப்பட்டன. அதை வைத்து தினமும் பயிற்சி மேற்கொண்டார். இதையடுத்து 250 கிலோ உடல் குறைந்துள்ளார் பிராங்கோ. அடுத்த வருடத்துக்குள் இன்னும் நூறு கிலோ குறைந்துவிடுவேன் என்று நம்பும் அவர், அதற்காக கடுமையான உடற்பயிற்சியில் இருக்கிறார்.
‘இந்த முயற்சி இருந்தால் போதும். கண்டிப்பாக எடையை இன்னும் குறைத்து சராசரி உடல் நிலைக்கு வந்துவிடலாம்’ என்கிறார்கள் டாக்டர்கள்!
எழுந்து நிற்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்த பிராங்கோ, இப்போது கம்பு வைத்துக்கொண்டு எழுந்து நிற்கிறார். குறைந்த தூரம் நடக்கிறார். அவருடைய இப்போதைய ஒரே ஆசை, ‘நான் நடக்கணும்’!