தமிழ் இனம் அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்காகவே புதிய யாப்பு திருத்தம்
அவதானிப்பு மையம் இடித்துரைப்பு
தமிழ் இனத்தை அழிக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாக்கவே புதிய யாப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம், வரலாறு முழுவதும் அரசியல் யாப்பு திருத்தம் என்பது இதற்காகவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. 22ஆவது அரசியல் திருத்த நிறைவேற்றம் குறித்து அவதானிப்பு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பேரினவாத இருப்புக்காக
சிங்கள பௌத்த பேரினவாத இருப்புக்காகவும் ஆளும் சிங்களப் பேரினவாத அரச தலைவர்களின் தனிப்பட்ட இருப்புக்காகவுமே ஸ்ரீலங்காவில் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளமையை வரலாற்றில் கண்டு வந்துள்ள நிலையில் தற்போதும் ரணில் அரசினால் அதே நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே 22ஆவது அரசியல் திருத்தம் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கள கட்சிகளின் வலுச் சமநிலையை தக்க வைக்கும் இச் செயற்பாட்டுக்கு ஸ்ரீலங்காவின் ஆளும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பேரினவாதக் கட்சிகளும் தரப்புகளும் இணைந்து செயற்பட்டுள்ளன. இதேவேளை இப் பெரும்பான்மை தரப்பு தமிழ் மக்களுக்கான நலனுக்காக இவ்வாறு ஒருபோதும் இணைந்து ஒன்றாக நின்றதில்லை. மாறாக தமிழ் இனத்தை அழிக்கவே ஒன்றுபடுவது வரலாறு.
பேரினவாதம் இணைந்த தருணம்
கடந்த அக்டோபர் 21ஆம் திகதி ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் போது 179 உறுப்பினர்கள் திருத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பரமுன மற்றும் பசில் தரப்பின் ஆதரவு அணியினர் 44பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ரணலால் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜீ.எல் பீரிஸ் , விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினர்களும் திருத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிப்பின் போது வெளியேற்றம் செய்திருந்தது. 22ஆவது திருத்தத்தை எதிர்ப்பதுபோல பாசாங்கு செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேரினவாதத்துடன் கலந்து ஐக்கியமாகி இரட்டை வேடம் செய்துள்ளது.
ஸ்ரீலங்கா யாப்புகள்
ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியரால் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அக் காலகட்டங்களில் மறுக்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை உள்ளிட்ட மக்கள் ஜனநாயக நலன்கள் காலனிய ஆட்சிக் காலத்திலேயே யாப்பு திருத்தம் வாயிலாக படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஸ்ரீலங்கா யாப்பு தமிழ் இனத்தை அழிக்கும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தை வளர்க்கும் நோக்கில் வலுப்படுத்தப்பட்டு வந்தமை வரலாறு ஆகும்.
அந்த வகையில் பாரிய அளவில் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்ட ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, தமிழ் பேராசிரியரான ஏ.ஜே. வில்சனின் ஆலோசனை ஒத்துழைப்புடன் நிறைவேற்று அதிகார திருத்தத்தை 1978இல் மேற்கொண்டார். இதன் வாயிலாக ஜே.ஆர். 83 ஜூலை இனப்படுகொலையை நிகழ்த்தியிருந்தார். அது பாரிய தமிழினப் படுகொலைக்கான ஒத்திகையாக மாறியதுடன் ஸ்ரீலங்கா அரச தலைவர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழ் இனத்தை அழிப்பதற்கான முன்னோடியாகவும் ஜே.ஆரை பின்பற்றினர்.
ஜே.ஆர். வழியில் ரணி
22ஆவது அரசியல் திருத்தம் வாயிலாக, ஜனாதபதிக்கான தனி அதிகாரம் நீக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு வழங்குதல், இரட்டை பிராஜவுரிமை உள்ளவர்கள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை தடுத்தல், இரண்டரை வருடத்தில் பாராளுமன்றத்தை கலைத்தல் போன்ற விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதுவரையில் தனி ஒருவராக பௌத்த சிங்களப் பேரினவாத பிரதிநிதியாக நின்று இனவழிப்பை செய்த நிலையில் இனி வரும் காலத்தில் அரசியலமைப்பு பேரவை மற்றும் பாராளுமன்றம் வாயிலாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை சார்ந்த நடவடிக்கைகள் பரவலாக்கப்படுதலை ஜே.ஆர். வழியில் ரணில் மேற்கொண்டுள்ளார். கடந்த காலத்தில் புதிய அரசியலமைப்பில் தமிழருக்கு தீர்வு வழங்குவேன் என்ற ரணில் இப்போது ஜே.ஆர் போல சிங்களப் பேரினவாத பெட்டிக்குள் பாம்பாக நின்று ராஜபக்சவினரை விஞ்சும் செயல்களில் ஈடுபடுகிறார்.
ஏமாறும் சர்வதேசம்
ஸ்ரீலங்காவின் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்றும் அதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவோம் என்றும் ஸ்ரீலங்கா கடந்த காலத்தில் சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது ஸ்ரீலங்கா பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்திடம் இருந்து கடன்கள், உதவிகள் உள்ளிட்ட நலன்களை கோரி எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் சர்வதேசத்தை ஏமாற்றவே அரசியல் யாப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு துளியளவும் நன்மைகூட இல்லாத வகையில் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்கள உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதற்கு ஏதுவான சூழலை இத் திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் அணுகுமுறை, கால அவகாசம் போன்றவற்றில் பலம் பெற்ற ஸ்ரீலங்கா தற்போது சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுகிறது.
தமிழரின் அபிலாசை
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டுவரபட்ட 13ஆவது அரசியல் திருத்தத்தின்படி மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரத்தை இன்னமும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதன் ஊடாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களப் பேரினவாதிகளுமே ஸ்ரீலங்கா அரசியல் யாப்பை மீறுகின்றனர். அத்துடன் ஸ்ரீலங்கா அரசியல் யாப்பு என்பதே ஈழத் தமிழ் மக்களை ஒடுக்கி பௌத்த சிங்கள பேரினவாதத்தை விரிவாக்கும் ஒற்றை நோக்கை கொண்டது. எனவே அவ் அரசியல் அமைப்பு யாப்பு திருத்தமும் பேரினவாத விஸ்தரிப்பையே மேற்கொள்கிறது.
இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தமது தாயமாக கொண்டுள்ள வடக்கு கிழக்கை ஸ்ரீலங்கா அரசியல் யாப்பில் இருந்து விடுவித்து ஈழத் தமிழ் மக்கள் தமது நலத்திற்கும் பலத்திற்கும் பாதுகாப்பிற்குமான புதிய யாப்பை புதிய தேசத்தில் உருவாக்குவதே காலத்தின் தேவையும் ஈழத் தமிழர்களின் அபிலாசையுமாகும். ஸ்ரீலங்கா அரசியல் யாப்பு மற்றும் அதன் வழியாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையால் இந்த அபிலாசையை வெளிப்படுத்தி வரும் ஈழ மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அதனை நிறைவேற்ற சர்வதேசம் முன்வர வேண்டும்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.