புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் நேற்று வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் 1 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,405 ஆக அதிகரித்தது. இதனிடையில், புதுச்சேரியில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,773 ஆக உயா்ந்தது. இதனிடையே, 122 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,16,325 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 257 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,050 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்தது.
இதனிடையே புதுச்சேரியில் தளர்வுளுடன் ஜூலை 31 ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது தொடர்பாக ஆய்வறிக்கை தர வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா மேலாண்மை சீராய்வு கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா 2 வது அலையைத் தொடா்ந்து, 3 வது அலை பாதிப்பு வரும் என வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். 3 ஆவது அலையின்போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவாா்கள் எனக் கூறப்படுகிறது. கொரோனா 3 ஆவது அலையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் தனிப் பிரிவுகள் தொடங்க வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.