அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும் 21ஆம் திகதி நேரில் சந்திக்கின்றது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
இந்தத் தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்ப்பார்த்திருப்பதாகவும், அந்தச் சந்திப்பின் பின்னர் முன்னோக்கிப் பயணிப்பதற்கான சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அரசியிலிருந்து வெளியேறுமாறும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறுவது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம்மிக்கதாகக் கருதப்படுகின்றது.
மேற்படி சந்திப்பின் பின்னரே சுதந்திரக் கட்சியினரின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளன எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறினார்.