லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் தொடர்ந்தும் இரண்டாவது முறையாகவும் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அதன்படி பானுக ராஜபக்ஷ தலைமையிலான காலி கிளடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜப்னா கிங்ஸ் 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும், 20 மில்லியன் ரூபா பணப்பரிசையும் தனதாக்கியுள்ளது.
நேற்றிரவு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் களமிறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ரமானுல்லா குர்பாஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ஓட்டங்களை சேர்த்தது.
பின்னர் 5.2 ஆவது ஓவரில் குர்பாஸ் 35 (18) ஓட்டங்களுடன் ஆட்மிழக்க, முதல் பவர் பிளேயின் முடிவில் ஜப்னா கிங்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ஓட்டங்களை எடுத்தது.
குர்பாஸ் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தாலும், அவரையடுத்து களமிறங்கிய கோஹ்லர்-காட்மோருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டி வந்தார் அவிஷ்க.
இரண்டாவது தகுதிச் சுற்றில் சதம் அடித்த வலது கை தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க நேற்றைய இன்னிங்ஸில் மொத்மாக 41 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை எடுத்தார்.
அந்த ஓட்ட இலக்குடனே தனது இன்னிங்ஸை முடித்துக் கொண்ட அவிஷ்க நுவான் துஷாரவின் பந்து வீச்சில் தனுஷ்க குணதிலக்கவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதனால் ஜப்னா அணியின் இரண்டாவது விக்கெட் 12.4 ஓவரில் (119-2) வீழ்த்தப்பட்டது.
அடுத்து வந்த சோயிப் மாலிக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் அதிக நேரம் ஆடுகளத்தில் தாக்கு பிடிக்காத அவர் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இறுதியாக திசர பெரேராவும் கோஹ்லர்-காட்மோரும் ஜோடி சேர்ந்து எதிரணியின் பந்துகளை சின்னாபின்னமாக்கினர். குறிப்பாக இறுதி ஓவரில் மாத்திரம் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது.
அந்த ஓட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை குவித்தது ஜப்னா.
ஆடுகளத்தில் காட்மோர் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களுடனும், திசர பெரேரா 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கலாக 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பின்னர் 120 பந்துகளில் 202 ஓட்டங்கள் என்ற வலுவான இலக்கினை துரத்திய காலி கிளாடியேட்டர்ஸுக்கு தொடக்க ஆட்டக்காரர்களான தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் 26 பந்துகளில் 63 ஓட்டங்களை எடுத்து விரைவான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இந் நிலையில் 5 ஆவது ஓவருக்காக வனிந்து ஹசரங்க பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள, அந்த ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் அதிரடி காட்டி வந்த தனுஷ்க குணதிலக்க 54 (21) ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பென் டங்க்கும் எதிர்கெண்ட முதல் பந்திலேய டக்கவுட் ஆனார்.
அவரின் வெளியேற்றத்தை அடுத்து தொடர்ந்து வந்த மொஹமட் ஹபீஸ் 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆக ஆட்டம் இக்கட்டான நிலைக்கு சென்றது.
ஆரம்பத்தில் வலுவான நிலையில் இருந்த அணி 6.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 84 ஓட்டங்களை பெற்றது.
அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களின் தொடர்ச்சியான ஆட்டமிழப்பினால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அவர்களால் 9 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
பந்து வீச்சில் ஹசரங்க மற்றும் சதுரங்க டிசில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், மகேஷ் தீக்ஷன மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதியாக 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற ஜப்னா இரண்டாவது முறையாகவும் எல்.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் அவிஷ்க பெர்னாண்டோ தெரிவானார்.
குறிப்புகள்
- சதம் விளாசிய வீரர் ; அவிஷ்க பெர்னாண்டோ
- அதிக ஓட்டம் ; குசல் மெண்டீஸ் (327)
- அதிக விக்கெட்டுகள் ; சமித் பட்டேல் (16)
- அததிக சிக்ஸர்கள் ; கோஹ்லர்-காட்மோர் (20)
- அதிக பிடியெடுப்புகள் ; வனிந்து ஹசரங்க (03)
- அதிக அரைசதம் பெற்றவர் ; அவிஷ்க பெர்னாண்டோ (03)
- வளிர்ந்து வரும் வீரர் ; ஜனித் லியனகே
- பலம் வாய்ந்த வீரர் – திசர பெரேரா
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]