2018-ம் ஆண்டு பிறக்க இன்னும் எட்டு நாட்களுக்கு மேல் உள்ளது. அதன்பின் பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, மே தினம், சுதந்திர தினம், ஆயுத பூஜை ஆகிய சிறப்பு தினங்கள் வர உள்ளன. அவற்றையெல்லாம் தள்ளி விட்டு 2018ம் ஆண்டு தீபாவளியைப் பற்றி இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விஜய், அஜித், சூர்யா ஆகியோர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் தீபாவளிக்கு வரும் எனப் பேசப்படுவதே அவர்களின் பேச்சுக்குக் காரணம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2018ல் ஆரம்பமாக உள்ளது. அதே மாதத்தில் சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படமும் ஆரம்பமாகப் போகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பும் ஜனவரியில் தான் ஆரம்பமாகும் என்கிறார்கள். இந்தப் படங்கள் அனைத்தும் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும் வகையில் திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் விஜய், அஜித், சூர்யா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளார்கள். இவர்கள் மூவரும் மோதும் படங்கள் ஒரே நாளில், அதுவும் தீபாவளியன்று வெளியாகும் நிலை வந்தால் அடுத்த வருட தீபாவளிக் கொண்டாட்டத்தில் தீப்பொறி பறக்கும்.