2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும் மண்டபம் நிறைந்த அங்கத்தவர்கள் கலந்துகொண்ட ஓர் சிறப்பான விழாவாக இனிதே நடந்தேறியது.
விழா அழகிய மண்டபத்தில் நடைபெற்றது. விழாவினை குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள் மிகவும் சிறப்பாக நிகழ்வின் முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கியிருந்தார்கள். விழாவின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் ஓர் சிறப்பான உரையினை வழங்கியிருந்தார்கள். அவர்கள் தங்களது உரையில் தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சனைகள் குறித்தும் எதிர்காலத்தில் செய்யப்படவேண்டிய ஆக்கபூர்வமான செயற்பாடுகள் குறித்தும் விளக்கியிருந்தார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு (Provisional Transitional Government of Tamil Eelam) என்பது அனைத்துலக சட்டமரபு நெறிகளுக்கு அமைவாக தமிழீழத்திலும் வெளிநாடுகளிலும் பரவி வாழும் தமிழீழத்தவர்களின் தற்காலிக அரசமைப்பு ஆகும். இலங்கையின் அரசியலில் தமிழர்கள் பங்கு பெறுவது சாத்தியம் அற்றதாகிவிட்டதால், அந்த தீவிற்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தற்போதைக்குத் தொடருவதற்காக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் தங்களது குறிக்கோளில் இருந்து தாங்கள் சற்றும் விலகிச் செல்லாமல் தொடர்ச்சியாக தங்களது பாதையில் முன்னெடுத்து செல்ல மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்கள். ஆரம்ப நிகழ்வாக “சங்கே முழங்கு” என்ற எழுச்சி பாடலுக்கு கனடாவின் முன்னணியில் திகழும் மிகப்பெரிய பரத நடன பள்ளியியை நிறுவி பல மாணவர்களை பரத நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்கிவருபவரும், பல நிதி உதவி நிகழ்வுகளில் தலைமை அதிகாரியாக செயட்பட்டுவருபவரும், எந்த சமூக நிகழ்வாயினும் தங்களது மாணவர்களை தயார் செய்து நிகழ்வுகளில் பங்கு கொள்ள வைப்பதன் மூலம் பல நிகழ்வின் வெற்றிக்கு வலைசமைத்துவருபவருமான பரதகலா வித்தகர் ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் மாணவிகள் மிகவும் சிறப்பாக எழுச்சி நடனத்தினை வழங்கியிருந்தனர். “தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா” என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும் என்ற உரத்த தொனியில் நடனம் அசைவின் மூலம் வெளிக்கொணரப்பட்டது. இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் நாடு கடந்த அரசாங்கம் செயற்பாடுவருவதாக பலரும் என்னிடம் தெரிவித்தனர். சங்கே முழங்கு சங்கே முழங்கு, சங்கே முழங்கு சங்கே முழங்கு, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் என்ற பாடல் வரிகள் தமிழர்கள் இனியாவது ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதை பறைசாற்றியது. இதனையே நிமால் விநாயகமூர்த்தி அவர்களும் பறைசாற்றி இருந்தார்கள். ஒட்டு மொத்தத்தில் நிகழ்சிகள், தரமான பேச்சுக்கள், கௌரவ நிகழ்வுகள் என ஓர் சிறப்பான விழாவாக நடந்தேறியது. விழாவினை ஒழுங்கு செய்த குழுவினருக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Langes, FCPA, FCGA