2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் கண்டுபிடிப்பு: பொதுமக்கள் பார்வைக்கு வைக்க முடிவு
அயர்லாந்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் உருளையை கண்டுபிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் Meath பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் Jack Conway. அப்போது அவருக்கு புதைக்கப்பட்ட நிலையில் வெண்ணெய் உருளை ஒன்று கிடைத்துள்ளது.
உடனடியாக அருகாமையில் உள்ள அருங்காட்சியகத்தை தொடர்பு கொண்டு அந்த வெண்ணெய் உருளையை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார் ஜாக்.
இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட Cavan County Museum வியக்க வைக்கும் செய்தியை ஜாக்கிடம் கூறியுள்ளது. ஜாக் கண்டெடுத்துள்ள அந்த வெண்ணெய் உருளை சுமார் 10 கிலோ எடை கொண்டது மட்டுமின்றி இது 2000 ஆண்டுகள் பழமையான வெண்ணெய் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வெண்ணெயானது நிலப்பரப்பில் இருந்து 12 அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது முன்னோர்கள் எவரும் மத ரீதியான சடங்குகளின் ஒருபகுதியாக விலங்குகளிடம் இருந்து நிலத்தை காக்கும் பொருட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மரத்தாலான சட்டத்திற்குள் வைத்து வெண்ணெயை பாதுகாப்பார்கள், ஆனால் இந்த வெண்ணெய் உருளை மண்ணிலேயே புதைக்கப்பட்டுள்ளது.
பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் உட்பட எந்த பொருளையும் செல்வத்தின் அறிகுறியாகவும், முக்கியமானதாகவும், மதிப்புமிக்கதாகவும் அயர்லாந்து மக்கள் கருதியிருந்தனர்.
மட்டுமின்றி வெண்ணெய் என்பது அந்த காலத்தில் மிக விலை உயர்ந்த பொருளாக பாவிக்கப்பட்டது. தங்களுக்கான வரி செலுத்த பெருவாரியான மக்கள் வெண்ணெயை வழங்கி வந்துள்ளனர்.
தற்போது இந்த வெண்ணெய் உருளையானது டப்லினில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.