புதுடில்லி: மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் 20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ., கையில் எடுத்த முக்கிய ஆயுதங்களுள் ஒன்று வாரிசு அரசியல். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் செய்வதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வந்தனர். தேர்தல் முடிவுக்கு பின்னர், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி, தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்த்து 72 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில், மோடியின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் குமாரசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், முன்னாள் எம்.பி., ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல் என 20 பேர் அடங்கிய வாரிசுகளின் பட்டியலை வெளியிட்டார் ராகுல்.
பட்டியலுடன் ராகுல் பதிவிட்டதாவது: ”பரம்பரை பரம்பரையாக போராட்டம், சேவை, தியாகம் தான் எங்கள் மரபு என்று சொல்வோர், ‘அரசு குடும்பத்தில்’ வாரிசுகளுக்கு இடம் கொடுத்துள்ளனர். நரேந்திர மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.