இந்தியத் திரையுலகின் மிகப் பிரம்மாண்டமான படமாகத் தயாராகி வரும் ‘2.0’ படம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய ஒரு படம். ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் ஆகிய பணிகளில் தடங்கல் ஏற்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி வெளியிடமுடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி இயக்குனர் ஷங்கர் தற்போது தெரிவித்துள்ளார்.
“2.0 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை செய்வதற்காக ஒரு கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தோம். அதன்படி கடந்த வருட தீபாவளிக்கு முன்பாகவே அவர்கள் வேலைகளை முடித்துத் தர வேண்டும். ஆனால், அவர்கள் தரவில்லை, பின்னர் கொஞ்சம் தாமதமாகும் என்று சொன்னதால் பட வெளியீட்டை 2018 ஜனவரிக்குத் தள்ளி வைத்தோம்.
கடந்த வருடம் இசை வெளியீட்டை நடத்திய போது அந்த நிறுவனம் ஜனவரிக்கும் தர முடியாது என்று சொன்னார்கள். அதன்பின்னர்தான் அந்த கிராபிக்ஸ் வேலைகளைச் செய்யும் தகுதி அந்தக் கம்பெனிக்கு இல்லை என்று எங்களுக்குத் தெரிய வந்தது. இதன்பின்னர்தான் படத்தின் 2100 விஎப்எக்ஸ் காட்சிகளை உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள கம்பெனிகளுக்குப் பிரித்துக் கொடுத்தோம். இதனால், ஆரம்பத்திலிருந்தே மீண்டும் அந்த வேலைகளைச் செய்ய வேண்டியதாயிற்று. இதுதான் பட வெளியிடு தாமதம் ஆனதற்குக் காரணம்,” என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர்.