வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் இரண்டாவது முறையாக பொதுவெளியில் தோன்றியிருக்கிறார்.
இந்த முறை ஏவுகணை ஆராய்ச்சியாளர்களை அவர் சந்தித்துள்ளார். இந்த மாதம் ஏவப்பட்ட Hwasong-17 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக கிம் ஜாங்க் உன்னின் மகள் பொதுவெளியில் தோன்றியது அடுத்த அரசியல் வாரிசாக அவருக்கு வழங்கப்படும் பயிற்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது வரை கிம் ஜாங் உன் மகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயதும் யாருக்கும் தெரியாது.
தென்கொரியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கூறுவதன் படி, இந்த பெண் கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் கிம் ஜு ஏ, இவருக்கு 10 வயது இருக்கலாம்.
புதிதாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கிம் ஜங் உன்னின் இரண்டாவது மகள் அவருக்கு அருகில் நின்ற படி இராணுவத்தினருடன் இருக்கிறார்.
வடகொரிய அரசு ஊடகமான கொரியன் சென்டரல் நியூஸ் ஏஜென்ஸி KCNA அவரை ஜனாதிபதியின் மிகவும் பிரியமான மகள் என்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த தகவல்களும் பொதுவெளியில் கிடையாது. தென் கொரிய ஊடகங்கள் கிம் 2009ம் ஆண்டு ரி சொல் என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.
கிம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதை விட அவரது மகள் உலகுக்கு விரைவாக அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டார் என்றே ஊடகங்கள் கூறுகின்றன. கிம் இளைஞனாக வளர்ந்த பின்னர் தான் உலகுக்கு காட்டப்பட்டார்.