சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான 14 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனாகப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி அன்டிகுவாவில் இன்று சனிக்கிழமை (05) நடைபெறவுள்ளது.
16 நாடுகள் 4 குழுக்களில் பங்குபற்றிய உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவிலிருந்து இங்கிலாந்தும் பி குழுவிலிருந்து இந்தியாவும் தோல்வி அடையாத அணிகளாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 4 தடவைகள் சம்பியனான இந்தியா, 5ஆவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து 8ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
அத்துடன் 4ஆவது தடவையாக இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளமை விசேட அம்சமாகும். 1998இல் சம்பியனான இங்கிலாந்து 24 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக அன்டிகுவாவில் புதன்கிழமை (02) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா 96 ஓட்டங்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
ஆப்கானிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் மிகவும் பரபரப்காக செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற 1ஆவது அரை இறுதிப் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 15 ஒட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டி முடிவுகளின் பிரகாரம் இங்கிலாந்தைவிட இந்தியா ஒரளவு பலம்வாய்ந்த அணியாக தென்படுகின்றது.
இந்திய அணியில் தூல் (1 சதம், 1 அரைச் சதம்), ராஜ் பாவா (1 சதம்), ஆங்ரிஷ் ராகுவன்ஷி (1 சதம், 1 அரைச் சதம்), ஷய்க் ராஷீத் (1 அரைச் சதம்), ஹார்நூர் சிங் (1 அரைச்சதம்) ஆகியோர் துடுப்பாடடத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். பந்துவீச்சில் இடதுகை சுழல்பந்துவீச்சாளரான விக்கி ஒஸ்ட்வால் 12 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து வீரர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜொஷுவா பொய்டன் 13 விக்கெட்களையும் வலதுகை சுழல்பந்துவீச்சாளர் 12 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த வீரர்களின் திறமைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் துடுப்பாட்டத்தில் இந்தியாவும் பந்துவீச்சில் இங்கிலாந்தும் பலசாலிகளாக காணப்படுகின்றன.
எனவே இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]