மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென். கிட்ஸ், பஸட்டரே கொனரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக்கில் விளையாட தகுதி பெற்றது.
சதீஷ ராஜபக்ஷ குவித்த அரைச்சதம், அஞ்சல பண்டார, ஷெவொன் டெனியல், ரனுது சோமரட்ன ஆகியோர் துடுப்பாட்டத்தில் அளித்த அதிகப்பட்ச பங்களிப்பு என்பன இலங்கை வெற்றி பெறுவதற்கு உதவின.
மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 251 ஓட்டங்கள் என்ற வெற்றி இலங்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
முதல் ஓவரில் மொத்த எண்ணிக்கை 4 ஓட்டங்களாக இருந்தபோது சமிந்து விக்ரமசிங்க (4) ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், ஷெவொன் டெனியலுடன் (34) 2 ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களையும் சக்குன நிதர்ஷன லியனகேயுடன் (9) 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் அஞ்சல பண்டாரவுடன் (40), 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களையும் சதீஷ ராஜபக்ஷ பகிர்ந்து இலங்கைக்கு உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார்.
எவ்வாறாயினும் மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது சதீஷ ராஜபக்ஷ 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அதிர்ச்சியை எதிர்கொண்டது.
எனினும் அணித் தலைவர் துனித் வெல்லாலகே (15), ரனுது சோமரட்ன (28 ஆ.இ.), ரவீன் டி சில்வா (13), யசிரு ரொட்றிகோ (6 ஆ.இ.) ஆகியோர் திதானத்துடன் துடுப்பெடுத்தாடி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் மெக்கெனி க்ளார்க் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஈசாய் தோர்ன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர்களான ஷக்கியர் பாரிஸ் (16), மெத்யூ நண்டு (7) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஆனால், அடுத்த நான்கு துடுப்பாட்ட வீரர்களான டெடி பிஷொப் (45), கெவின் விக்ஹாம் (56), ஜோர்டான் ஜோன்சன் (47), ரிவால்டோ க்ளார்க் (45), ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
பின்வரிசையில் மெக்கெனி க்ளார்க் (21) சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.
இதனிடையே டெடி பிஷப், கெவின் விக்ஹாம் ஆகியோர் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களையும் கெவின் விக்ஹாம், ஜோர்டான் ஜோன்சன் ஆகியோர் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களையும் ரிவால்டோ க்ளார்க், மெக்கெனி க்ளார்க் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
இலங்கை பந்துவீச்சில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய துனித் வெல்லாலகே இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 94 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சதீஷ ராஜபக்ஷ ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]