வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தகைமை திகதி ஜுன் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 2022 ஆம் ஆண்டிற்குரிய தேருநர் இடாப்பில் தம்மைப் பதிவுசெய்துகொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு மற்றும் யோசனைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் 09 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
வாக்களாளர்களைப் பதிவுசெய்யும்போது அதற்குரிய தகைமை பெறும் திகதியான ஜுன் முதலாம் திகதி தற்போது பெப்ரவரி முதலாம் திகதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயதைப் பூர்த்திசெய்த (2004 ஜனவரி 31 இற்கு முன்னர் பிறந்த) நபர்கள், அத்திகதியன்று அவர்கள் வசிக்கும் முகவரியில் 2022 ஆம் ஆண்டில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் நிலை காரணமாக இவ்வாண்டில் வாக்காளர்களைக் கணக்கெடுப்பதற்கான படிவங்கள் வீடு வீடாகச்சென்று விநியோகிக்கப்படமாட்டாது என்பதுடன், 2021 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பிலிருந்து நீக்கப்படுபவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் உட்சேர்ப்பதற்கான தகைமையைப் பெற்றுக்கொள்பவர்களின் பெயர்களின் அடிப்படையில் தேருநர் இடாப்பு மீளாய்வு செய்யப்படும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களை, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியின்கீழ் 2022 ஆம் ஆண்டில் மீள்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அதற்காக அவர்கள் எந்தவொரு விண்ணப்பப்படிவத்தையும் பூர்த்திசெய்யவேண்டிய அவசியமில்லை.
அதேவேளை 2021 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்படாத அல்லது 18 வயது பூர்த்தியடைந்தமையின் அடிப்படையில் முதற்தடவையாகப் பதிவுசெய்துகொள்ளவுள்ள அல்லது 2021 ஆம் ஆண்டின் பதிவு முகவரியை மாற்றியமைத்துக்கொள்ள அல்லது 2022 ஆம் ஆண்டில் வாக்களரொருவராகப் பதிவுசெய்துகொள்ளவேண்டிய தேவையுடையவர்கள் இவ்வாண்டுக்குரிய வாக்காளர் பதிவு விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து அவர்களுடைய கிராம அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும். அதனுடன் தொடர்புடைய மேலதிக விபரங்கள் அந்த விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கடந்த ஆண்டிற்கான வாக்காளர் ஒருவராகத் தமது பெயர் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றதா என்பதனை கிராம அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக அறிந்துகொள்ளமுடியும். அல்லது www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தின் மூலமும் இத்தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதுமாத்திரமன்றி www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொள்வதற்கு விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
ஒருவர் 18 வயதை எட்டியவுடன் குறைநிரப்பு தேருநர் இடாப்பு மூலம் அவருக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க பெப்வரி 1 – மே 31, ஜுன் 1 – செப்டெம்பர் 30, அக்டோபர் 1 – ஜனவரி 31 ஆகிய காலப்பகுதிகளில் 18 வயதைப் பூர்த்திசெய்யும் நபர்களின் பெயர்கள் உள்ளடங்கிய குறைநிரப்பு தேருநர் இடாப்பு அனைத்து 4 மாதங்களுக்கும் ஒருமுறை தயாரிக்கப்படும். அதற்கமைய இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2024 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 18 வயதைப் பூர்த்திசெய்யும் இளம் பிரஜைகளைக் குறைநிரப்பு தேருநர் இடாப்பில் உட்சேர்ப்பதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும்.
இவற்றுக்குரிய விண்ணப்பபடிவங்களை அனைத்துக் கிராம அலுவலகங்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் என்று தெரிவித்தார்.