மலேசியாவில் எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு ஆசிய அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் இலங்கை பங்குபற்றவுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக புனித பேதுருவானவர் கல்லூரி றக்பி வீரர் விஷென்க சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் போட்டியில் மிகத் திறமையாக விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்ற வீரராவார்.
உதவி அணித் தலைவராக இஸிபத்தன கல்லூரி றக்பி வீரர் தினேத்ர தொடங்கொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் பாடசாலைகள் றக்பி போட்டியில் தத்தமது பாடசாலை அணிகளுக்காக திறமையை வெளிப்படுத்திய 12 வீரர்களை ஆசிய அணிக்கு எழுவர் றக்பி போட்டிக்கு றக்பி தெரிவாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ப்றட்பி கேடய றக்பி போட்டியில் திரித்துவ அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றிய ஷான் அல்தாப், அணியில் இணைக்கப்பட்டிருந்தபோதிலும் அவர் உபாதைக்குள்ளானதால் தயார் நிலை வீரரான வெஸ்லி கல்லூரியின் கெய்ஸர் லய் இறுதி குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு ஆசிய அணிக்கு எழுவர் றக்பி போட்டியில் இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர், ஹொங்கொங், மலேசியா, இந்தியா, தாய்லாந்து, சைனீஸ் தாய்ப்பே, சவூதி அரேபியா, புருணை ஆகிய பத்து நாடுகள் போட்டியிடுகின்றன.
18 வயதின்கீழ் இலங்கை றக்பி குழாம்
விஷென்க சில்வா – தலைவர், நெத்ஷான் பீரிஸ், செனுத் தின்சார,(மூவரும் புனித பேதுருவானவர்), தினேத்ர தொடங்கொட – உப தலைவர், ஷாக்கிப் ஸும்ரி, நிமன்த சந்தீப்ப (மூவரும் இஸிபத்தன), கெய்ஸர் லய், மொஹமத் பவாஸ் (இருவரும் வெஸ்லி), திசாஸ் பத்திரண (றோயல்), ததீர பெரேரா (டி.எஸ். சேனாநாயக்க), லுக்மான் நடீம் (ஸஹிரா), சதீஷ வீரவன்ச (தர்மராஜ)
அணியின் பயிற்றுநராக ரஜீவ் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.