கங்குவா – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன் & யு வி கிரியேஷன்ஸ்
நடிகர்கள் : சூர்யா, பாபி தியோல், திஷா படானி, நட்டி என்கிற நட்ராஜ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்
இயக்கம் : சிவா
மதிப்பீடு : 2.5 / 5
சூர்யா நடிப்பில்… பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி, பாரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு பார்வையாளர்களிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘கங்குவா’. வெளியீட்டிற்கு முன்னர் படக்குழுவினர் முன்மொழிந்த விஷுவல் பிரம்மாண்டம்… ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்த திரைப்படத்தின் கதை 1070 மற்றும் 2024 ஆகிய இரு வேறு காலகட்டங்களில் நடைபெறுகிறது. இதில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலமாக போற்றப்படும் கோவாவில் பிரான்சிஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா- நிழலுலக குற்றவாளிகளை வேட்டையாடுகிறார்.
இவர் குற்றவாளி ஒருவரை கும்பலுடன் பிடிப்பதற்காக ஈடுபட்டிருக்கும் தருணத்தில் மற்றொரு கொலை கார கும்பல் ஒரு சிறுவனை துரத்துகிறது. அந்த சிறுவனை சூர்யா- பிரான்சிஸ் காப்பாற்றுகிறார்.
அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுவது ஏன்? அந்த கும்பல் சிறுவனை துரத்துவது ஏன்? இதற்கான விடையை நனவோடை உத்தி மூலம் விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்க காட்சிகளில் ஸ்டைலீஷாக சூர்யா தோன்றினாலும் … காட்சிகள்- கதாபாத்திரங்கள் – நோக்கங்கள்- எதுவும் ரசிகர்களின் மனதில் பதிய மறுக்கிறது.
இதனால் சோர்வு ஏற்படுகிறது. ரசிகர்கள் கங்குவாவை எதிர்பார்த்து இருக்கையில் அமர்ந்திருக்க .. அவர் 20 நிமிடம் கழித்து தாமதமாக திரையில் தோன்றுகிறார் கங்குவா.
அதன் பிறகு திரைக்கதையில் வேகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டாகிறது. ஆனால் சில நிமிடங்களிலேயே நம் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைக்கிறார்கள்.
திரைக்கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதில் குழப்பமும் குளறுபடியும் ஏற்படுகிறது. இந்த விடயத்தில் படக் குழு ஒரு கோணத்திலும் … பார்வையாளர்கள் அதன் எதிர்ப்புறத்திலும் இருப்பதால்… இருவரும் சந்தித்து இணைந்து பயணிப்பதறற்கான சூழல் உருவாகாமல் போகிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை மட்டும் இணைத்திருக்கிறார்கள்.
படத்தின் வலிமை சூர்யா சூர்யா சூர்யா மட்டும் தான். இதனைத் தொடர்ந்து கவனம் பெறுவது வி எஃப் எக்ஸ் காட்சிகள். பல இடங்களில் இந்த வி எஃப் எக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தை எதிரொலிக்கிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற பிரம்மாண்டம் இதற்கு முன் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் பிரம்மாண்டத்தை மட்டும் எதிர்பார்த்து பார்வையாளர்களின் வருகை இல்லை.
இயக்குநர் சிவா சென்டிமென்ட் காட்சிகளை இடம் பெற வைப்பதில் தனித்துவமான அடையாளத்தை பெற்றவர். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அதனை மேலோட்டமாக வைத்ததால்… அதற்கான காட்சிகளும் மனதில் சிறிய அளவிலான தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. இருப்பினும் சூர்யா மற்றும் அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
‘ஆதி நெருப்பே..’ என்ற பாடல் பட மாளிகையில் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமியின் கடும் உழைப்பும் கவனம் பெறுகிறது.
பின்னணி இசையில் தான் ‘ராக் ஸ்டார்’ என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். எக்சன் காட்சிகளில் கூட பிரம்மாண்டத்தையும், தனித்துவத்தையும் காண்பித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள். அது குழந்தைகளுக்கும் … குழந்தைத்தனம் மிக்க பார்வையாளர்களுக்கும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.
விசுவல் பிரம்மாண்டத்தை உருவாக்குவதற்காக படக்குழுவினர் கடினமாக உழைத்து இருந்தாலும் ஒட்டுமொத்தமாக கங்குவா பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றவில்லை. இதில் இரண்டாம் பாகத்தில் சூர்யா – கார்த்தி மோதல் எனும் முத்தாய்ப்பினை வைத்திருக்கிறார்கள்.
கங்குவா – திரிசங்கு