முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியின் போது, அவர் மீதான கொலை முயற்சி வழக்கில் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பொறியியலாளரான சிவலிங்கம் ஆருரனை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
அரச இலக்கிய விருது பெற்ற அரசியல் கைதியான இவர், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தினை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு – கொள்ளுபிட்டி பித்தலைசந்தியி பகுதியில் அப்போதைய பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் பாதுகாப்பு செயளாளரான கோட்டாபய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரசசொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
உண்மை விளம்பல் விசாரணை
இந்த குற்றச்சாட்டுப் பத்திரத்தில், கைதியான சிவலிங்கம் ஆருரன் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில் பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயவிருப்பத்தில் வழங்கியதாக கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அரச தரப்பின் பிரதான சான்றாக முன்வைக்கப்பட்டு குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது அரச தரப்பின் பிரதான சான்றான குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக எதிரியினால் வழங்கப்படவில்லை என்ற ஆட்சேபனை எதிரி சார்பில் முன்வைக்கப்பட்டதை அடுத்து உண்மை விளம்பல் விசாரணை நடைபெற்றது.
உண்மை விளம்பல் விசாரணையில் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிசார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை பெற்றுக் கொண்டனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் எதிரி தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதனையடுத்து, அரச தரப்பின் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நிராகரிப்பதாக கட்டளை வழங்கினார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரிப்பதாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதையடுத்து எதிரிதரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இந்த அரசியல் கைதி 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்தக் கைதிக்கு எதிராக வழக்கை மேலும் தொடர்ந்தும் நடாத்த வேறு அரச சாட்சியங்கள் இல்லையாயின் கைதியை விடுதலை செய்யும்படி தனது சமர்ப்பணத்தில் வேண்டிக் கொண்டார்.
இதனையடுத்து, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகிய பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய வேறு சாட்சியங்கள் இல்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க சிவலிங்கம் ஆருரனை விடுதலை செய்தார்.
இந்த வழக்கில் அரச தரப்பில்க பிரதிசொலிசிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரோகாந்த அபேசூரிய முன்னிலையாகியதுடன் எதிரி சார்பில் சட்டத்தரணிகளான தர்மராஜா, தர்சிகா தர்மராசா ஆகியோரின் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானார்.