ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து செவ்வாய்கிழமை (19 ) சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜெஹான் முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தேவாலயமாக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவைப் பாதையை ஆரம்பித்து கால் நடையாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பின்னர் காலிமுகத்திடலில் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு நேற்று சென்று தனது நீதிக்கான போராட்டத்தை நிறைவுசெய்திருந்தார்.
ஜெஹான் தனது போராட்டத்தை உயிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரியும் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக சிலுவையை சுமந்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
நேற்றையதினம் காலிமுகத்திடல் போராட்டத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் கலந்துகொட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னால் இலங்கையர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஜப்பானிலும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விசேட நினைவு கூரல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கொழும்பில் அருட்தந்தையர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் , பௌத்த மதகுமார்கள் பேரணியாகச் சென்று காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இஸ்லாமிய மதப் பிரதிநதிகளும் பங்கேற்றிருந்தனர். இதன் போது அருட்தந்தையர்களால் அங்கிருந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]