தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார்
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் என்ற பிரசித்தி பெற்ற தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார் என்று தாய்லந்து அரண்மனை அறிவித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசரின் உடல்நிலை ஸ்திரமற்ற நிலையில் உள்ளது என்று அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தி்ருந்தனர்.

அவர்கள் கூறியதில் இருந்து, மருத்துவமனைக்கு வெளியில் அரசரின் நலம் விரும்பிகள் கூட்டமாக கூடியுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே மன்னர் பூமிபோன் உடல் நலம் குன்றி இருந்தார். அவரது உடல் நிலை கடந்த சில நாட்களில் மோசமடைந்தது.

88 வயதான இந்த அரசர் 1946ல் அரியணை ஏறினார். தாய்லந்தில் அவர் நாட்டை ஒற்றுமைப் படுத்தும் சக்தியாகப் பார்க்கப்பட்டார்.

அவரது மரணம் , ராணுவம் தற்போது ஆட்சி செய்து வரும் நாட்டில் ஸ்திரமற்ற நிலைக்கு வழிவகுக்கக்கூடும் என்று அச்சங்கள் நிலவுகின்றன.
புதிய மன்னர்
முடிக்குரிய இளவரசரான, மஹா வஜிரலோங்கோன் புதிய மன்னராகிறார் என்று தாய்லந்துப் பிரதமர் ப்ரயூத் சான் ஒச்சா கூறினார்.
காலமான மன்னர் பூமிபோனுக்கு நாடு ஓராண்டு காலத் துக்கம் அனுஷ்டிக்கும் என்று ஒச்சா கூறினார்.
“ மன்னர் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார்,தாய்லந்து மக்களை சொர்க்கத்திலிருந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கக்கூடும்“, என்றார் பிரதமர்.