முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(சனத் நிஷாந்த மற்றும் தேசபந்து தென்னகோன் மே 9 திகதி)
சனத் நிஷாந்த, மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு மிக நெருக்கமான இளம் அரசியல்வாதி என்பதுடன் அலரி மாளிகையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.
இந்த கூட்டத்தின் பின்னர் அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களுடன் சனத் நிஷாந்த காணப்படும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.
சனத் நிஷாந்த வன்முறையாளர்களை வழி நடத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவும் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை தாக்குதல் தொடர்பாகவே இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.