“நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு
எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார்.
கங்கை வென்றான், கடாரம் கொண்டான், பார் முழுவதும் போர் புரிந்து தமிழன் மார்தட்டித் திரிந்தான் என்பதெல்லாம் வரலாறுகளிலும் புதினங்களிலும் படித்துவிட்டு, சில நேரம் நெகிழ்ந்தும் சில நேரம் இதெல்லாம் சாத்தியமா என ஐயப்பட்டும் இருந்த காலத்தில்தான் நம் கண்முன்னே புறநானூற்றுத் தமிழனின் வீரத்தைப் பறைசாற்றினார்கள் ஈழத்தமிழர்கள். அந்த மாபெரும் தமிழ்க் கூட்டத்துக்குத் தலைமைதாங்கினார் ஒருவர்.
அவர்தான் தமிழின வீரன்! – அற்றைநிலந்தரு திருவில் மாறன்! – கரிகாற்சோழன்! இமய நெடுஞ் சேரன் எனத் தமிழ்ப்புலவர் பாவலரேறு பெருஞ்சித்திரனால் புகழப்பட்டவர்.
புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளாக எவனும் தோன்றியதில்லை என முத்தமிழ்க் காவலரால் போற்றப்பட்ட மாவீரன், பிரபாகரன்.
அந்த மாவீரனின் பிறந்த தினமான இன்று, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும், பிரபாகரனின் நேர்மையையும் வீரத்தையும் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஏன் இந்தப் போராட்டம்? “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.”
நாடு கேட்டார்களா… பிழைக்கப்போன இடத்தில் தமிழர்கள் நாடு கேட்டார்களா?
இன்றல்ல பல்லாண்டுகளுக்கு முன்பு, குடியாட்சிக்கு முன்பு, வலிமையான ஒரு நாடு, வலிமை குறைந்த நாட்டின்மீது அதிகாரம் செலுத்துவதை மட்டுப்படுத்த, சில விதிமுறைகளை வகுத்த காலத்துக்கு முன்பே, தமிழ் மன்னர்கள் படை நடத்திச் சென்று வென்றெடுத்த எந்த நாட்டையும் தாங்கள் ஆள நினைக்கவில்லை. அந்தந்த நில மன்னர்களிடமே கையளித்தார்கள். அது, தமிழர் மாண்பு. அப்பெரும் மாண்பு பொருந்திய தமிழினத்தில், பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்பானா தமிழன்.
“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.”
பிரபாகரன்
ஈழத்தீவு, தமிழர்களின் பூர்விக நிலம். வட இந்தியாவிலிருந்து குடியேறிய மன்னன் விஜயன். அவனுக்கு கைகொடுத்து உதவியவள், குவேனி எனும் தமிழ்மகள். இதைச் சொல்வது சிங்களவர்களின் புனித நூலான மஹாவம்சம். எனில், அங்கு சிங்களவர்கள் எனும் இனம் குடியேறுவதற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்தார்கள். சிங்களவர்களின் புனித நூலே அதை பறைசாற்றுகிறது. அதன் நினைவாக தபால்தலையும் வெளியிட்டு, பின்னர் வாபஸ் வாங்கியது சிங்கள அரசாங்கம். அதுபோகட்டும், காலம் கடந்து இலங்கையின் தெற்குப் பகுதியை சிங்கள மன்னர்களும், ஈழப் பகுதியை தமிழ் மன்னர்களும் ஆண்டது வரலாற்றுப் பதிவுகளாக இருக்கின்றன. கால ஓட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக நலனுக்காக ஒன்றாகச் சேர்த்த நாட்டில், சுதந்திரத்துக்குப் பிறகு அதிகாரங்கள் அனைத்தும் சிங்களவர்களின் கைக்குப் போனது. பெரும்பான்மைச் சிங்களவர்கள், தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்க ஆரம்பித்தார்கள். கல்வி உரிமையை, வழிபாட்டுரிமையை, நில உரிமையைப் பறித்து, தமிழர்களை உரிமையற்றவர்களாக மாற்றினார்கள்.
எடுத்ததும் ஆயுதமேந்தினார்களா ஈழத் தமிழ் மக்கள்? யார் இந்த பிரபாகரன், அவர்தான் முதன்முதலில் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்தாரா?
தந்தை செல்வா என்னும் காந்தியவாதியால், இன்னும் பல அறப்போராட்ட தியாகிகளால் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால அறப்போராட்டம், உரிமைப் போராட்டம் தோற்ற பின்னர்தான், ஈழத்தமிழரிடத்தில் ஆயுதம் கையளிக்கப்பட்டது.
யார் இந்த பிரபாகரன், அவர்தான் முதன்முதலில் ஆயுதப் போராட்டத்தை கையிலெடுத்தாரா?
1956 -ம் வருடம், வல்வெட்டித்துறையில் சிவபக்தரும் காந்தியவாதியுமான வேலுப்பிள்ளை- பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் பிரபாகரன். சிறுவயதிலிருந்து தந்தையின் அறவழிக் கருத்துகளை உள்வாங்கி வளர்ந்த பாலகன். உறவினப் பெண் ஒருத்தி, தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார். தந்தை வேலுப்பிள்ளை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் திருப்பித் தாக்கவில்லை என்கிற கேள்வி அச்சிறுவனிடத்தில் எழுகிறது. பாணாந்துரை என்னும் இடத்தில், குருக்கள் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் அவர் காதுக்கு வருகிறது.
கொடூர ஆயுதங்களோடு தாக்கும் எதிரிகளை நிராயுதபாணியாக எதிர்கொள்வது என்பது இன்னும் பல பேரழிவுகளுக்கே இட்டுச் செல்லும். உரிமைகளுக்காகப் போராடும் அரசியல் தலைவர்களைவிட, பல அப்பாவி உயிர்கள் துப்பாக்கித் தோட்டாக்களால், தீப்பிழம்புகளால் பறிக்கப்படுவதை அவர் மனம் ஒருபோதும் ஏற்கவில்லை.
பிரபாகரன் மட்டுமல்ல, ஈழத்தில் அப்போது பெரும்பாலான தமிழ் இளைஞர்களின் மனங்களும் அதே கொந்தளிப்பில்தான் இருந்தன. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் ஆயுதங்களை ஏந்தத் தயாரானார்கள். இல்லை, ஆயுதங்கள் அவர்களை ஏந்தத் தயாரானது. அப்படித்தான் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கியது.
பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்தவர்கள், ஓரியக்கமாக இணைந்தார்கள். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்றானது. அதைத் தாண்டியும் தங்களின் கொள்கைகளுக்கேற்ப பல இயக்கங்கள் ஆயுதங்களுடன் ஈழ மண்ணில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடத் தயாரானது.
”நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.”
பிரபாகரன்
பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானது எப்படி?
ஈழ மண்ணில் தங்களின் விடுதலைக்காகப் பல இயக்கங்கள் ஆயுதமேந்திப் போராடினாலும், உறுதியோடு போராடிய எந்த பெரிய அச்சுறுத்தலைக் கண்டும் சிறிதும் அச்சமுறாத, எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகு வைக்காத, விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத் தமிழ்மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரானார்.”நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.
நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகிறோம்”
தமிழர்களின் தேசியத் தலைவராக இருப்பது எப்படியிருக்கிறது என பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது,
”தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் தன்னலமற்ற ஒரு தலைமைக்குக் கீழ் இணைந்து போராடலாம் என்பதுதான் எனது ஆசை. அப்படி யாரும் இல்லாததால், இவ்வரலாற்றுப் பெரும் சுமையை நானே சுமக்கவேண்டியதாயிற்று” என்றார் பிரபாகரன்.
அவரை சாகசவாதியாக, பெரிய தந்திரக்காரராகச் சித்திரித்து, அவரைப் பற்றிய பல புனைவுக் கதைகள் உலவிக்கொண்டிருக்கையில்…
” தமிழர்களிடத்தில் ஒரு குணம் இருக்கிறது. யாராவது ஒருவர் பின்னால் மொத்தமாக அணி திரண்டு வந்து காப்பாற்றுவார் என நம்புவது. ஆனால் அது அப்படி அல்ல, மக்கள் போராட்டமே வெல்லும். நான் என் இன விடுதலைக்காகப் போராடும் ஒரு சாதாரண விடுதலைப் போராளி மட்டுமே” என்று தன்னை அறிவித்துக்கொண்டவர் பிரபாகரன்.
“நாம் இனத்துவேஷிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்கள பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்று தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அந்தஸ்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கௌரவத்துடன் வாழ விரும்புகிறோம்” – பிரபாகரன்.
பிரபாகரன் குறித்த விமர்சனங்களும் அதற்கு அவரின் பதில்களும்:
ஆயுதப் போராட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து அவர் கூறும்போது, ” ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்” எனப் பதிலளித்தார்.
மேலும், ”ஆயுதப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, காலம் எங்களிடம் கையளித்திருப்பது. நாங்கள் போர் வெறியர்களோ, ஆயுத விரும்பிகளோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களின் சுதந்திரத்தை மட்டும்தான்” என்றார் பிரபாகரன்.”ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்.”
சிங்கள ராணுவம், ஆயுதமேந்திப் போராடிய தமிழர்களை மட்டுமல்லாது, அப்பாவி மக்களையும் கொன்றொழித்தபோதும், சிங்கள மக்களைக் கொல்லுங்கள் எனும் உத்தரவு பிரபாகரனிடம் இருந்து வந்தது கிடையாது.
” சிங்கள ராணுவம் தமிழர்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதுபோல நாங்கள் சிங்கள மக்களை அழிக்க வேண்டுமென முடிவெடுத்தால், தினம் ஆயிரம்பேரைக் கொல்லமுடியும்.
எங்களுடைய ஒரு தாக்குதல்கூட அப்பாவி சிங்களமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதல்ல ” என்று கூறியவர் பிரபாகரன்.
மேலும், ”நாங்கள் எதிர்த்து நிற்பது எங்கள் மண்ணில் அதிகாரம் செலுத்தும் சிங்கள ராணுவத்தையே தவிர, அப்பாவி சிங்கள மக்களை அல்ல” என்றும் அறிவித்தவர் பிரபாகரன்.
அது மட்டுமல்ல, “பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவர் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தைப் பேணினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில், அவர் பெண் போராளிகளைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார்.
சிறீலங்கா ராணுவத்தினர், பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதுமான 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால், ஒரு படத்தில்கூட மதுபானக் குவளையுடன் பிரபாகரனைக் காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவராக இருந்தார். பலரும் கற்கவேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தன ” என்று சிங்கள ராணுவ ஜெனரல் கமால் குணரத்னாவால் பாராட்டப் பெற்றவர் பிரபாகரன். அவர் மட்டுமல்ல, இன்றளவும் பிரபாகரனைப் போற்றும் சிங்கள ராணுவத் தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள் பலர் உண்டு.
வெறும் ஆயுதப் போராளியாக மட்டும் இருந்தாரா பிரபாகரன்?
முப்படைகள் மட்டுமல்லாது,
* தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல்துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
* தமிழீழ வைப்பகம்.
* தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
* தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
* சமூகப் பொருளாதார அபிவிருத்தி வங்கி.
* கிராமிய அபிவிருத்தி வங்கி என நிர்வாகரீதியாகப் பல பிரிவுகளையும், ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கான ‘காந்தரூபன் அறிவுச்சோலை’, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான ‘செஞ்சோலை இல்லம்’, உடல் வலுவிழந்தோருக்கு ‘வெற்றிமனை காப்பகம்’ முதியவர்களைப் பாதுக்காக்க, ‘அன்பு முதியோர் பேணலகம்’, ‘சந்தோஷம் உளவள மையம்’ (மனநோயாளிகளுக்கானது), ‘நவம் அறிவுக்கூடம்’ (பார்வை இழந்த போராளிகளுக்கானது) என ஆதரவு இல்லங்களையும் நடத்திவந்தவர் பிரபாகரன்.
அதுமட்டுமா, தனி வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் என தனி ராஜாங்கத்தையே நடத்தியவர்.
தவிர, சமூக சீர்திருத்தங்களிலும் பெண் விடுதலை சார்ந்த விஷயங்களிலும் தனிக்கவனம் செலுத்தியவர். பேசுவதோடு மட்டுமல்லாமல், வரதட்சணை போன்ற விஷயங்களை ஒழித்து, நடைமுறையிலும் பெண்களுக்கான முன்னுரிமையை நிலைநாட்டியவர் அவர். படைகளிலும் முக்கியப் பொறுப்புகளில் பெண்களை அமர்த்தியவர் பிரபாகரன்.
திருமணம் குறித்துப் பேசும்போது,
”எங்கள் இயக்கத்தில் சாதி பார்த்துத் திருமணமெல்லாம் இல்லை. கலப்புத் திருமணத்தை ஏதோ பெரிய சாதனையாகச் சொல்லும் தன்மைகூட எங்களிடையே இல்லை. ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் ஏற்பாடு, அவ்வளவுதான். கலப்புத் திருமணம் இயல்பானது, அது இயற்கையானது” என்று அறிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், அரசியல்ரீதியாகப் பல முடிவுகளை எடுக்கத் தவறிவிட்டார், உலகச் சூழலை யோசிக்கத் தவறிவிட்டார் என அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் முன்பே தெரிவித்த கருத்துகள் சரியான பதிலாக இருக்கும்
” இந்த உலகமானது மானிட தர்மத்தின் சக்கரத்தில் சுழலவில்லை என்பது எமக்குத்தெரியாததல்ல. ஒவ்வொரு நாடும் தனது தேசிய சுயநலத்தையே முதன்மைப்படுத்துகின்றது. மக்கள் உரிமை, மனித உரிமை, தார்மீக அறத்திலும் பார்க்க, பொருளாதார, வர்த்தக நலன்களே இன்றைய உலக ஒழுங்கை நிலை நாட்டுகின்றன. சர்வதேச அரசியலும் சரி, இராஜதந்திர உறவுகளும் சரி, இந்த அடிப்படையில்தான் செயற்படுகின்றன.
இந்த நிலையில், எமது போராட்டத்தின் நியாயப்பாட்டை சர்வதேச சமூகம் உடனடியாக அங்கீகரித்துவிடுமென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆயினும், நாம் அந்த அங்கீகாரத்திற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிவர வேண்டும். மாறிவரும் உலகில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் ஒரு சந்தர்ப்பத்தில், சர்வதேச சூழ்நிலை எமக்குச் சாதகமாக அமையலாம். அப்பொழுது, உலகத்தின் மனசாட்சி நியாயத்தின் சார்பாக எம்பக்கம் திரும்பும் ” என்ற நம்பிக்கையோடு பேசியவர் பிரபாகரன்.
உங்கள் கணிப்பில் தமிழீத்தை எப்போது அடைவீர்கள் எனக் கேட்டபோது,
”விடுதலைப் போராட்டத்திற்கு கால வரையறையோ ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்க முடியாது. தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாகும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்”என்றார்.
எப்படியோ, தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையுமென நீங்கள் நினைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு,
”தமிழீழம், ஒரு சோஷலிஸ அரசாக அமையப்பெறும். இதில், மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து, தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும். இந்த சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன், அணிசேராக் கொள்கையைக் கடைபிடிக்கும். இந்தியாவோடு நேச உறவுகொண்டு, அதன் பிராந்தியக் கொள்கைகளை, குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கெளரவிக்கும்” என்று சொன்னவர் பிரபாகரன்.
யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயுதப் போராட்டம்தான் ஈழ மக்களின் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு பத்தாண்டுகள் ஆன பின்பும் அதே நிலை நீடிப்பது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார்கள். தவிர, யுத்த காலத்தில் இருந்ததைவிட, கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகிவருகிறார்கள் ஈழ மக்கள். நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கோயிலுக்குள் புத்த விகாரைகள் முளைக்கின்றன. பலர் காணாமல் ஆக்கப்படுகிறார்கள்.
நாம் பலமோடு இருந்த காலத்திலேயே நமது உரிமைகளைக் கொடுக்காதவர்கள், இப்போதா கொடுக்கப்போகிறார்கள் என ஈழ அரசியல் தலைவர்கள் பேசும் சூழலே அங்கு நிலவுகிறது. ”எங்கே பிரபாகரன், பிரபாகரன் ஆட்சிக் காலத்தில் அவர் இருந்திருந்தால்” என்னும் சாமான்ய மக்களின் குரல்கள் இப்போதும் அங்கே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, ”புலிகள் வலிமையாக இருந்த காலத்தில் எந்த நாட்டின் அச்சுறுத்தலும் இல்லை. குறிப்பாக, சீனாவின் ஆதிக்கம் இப்போது அங்கே கொடிகட்டிப் பறக்கிறது. இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். போரை முன்னின்று நடத்திய ராஜபக்ஷே சகோதரர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட்டார்கள்.
ஆம்.
இலங்கை தீவினில்
வாழ்ந்த ஒரே ஒரு புத்தனையும்
நந்திக்கடலில் தொலைத்துவிட்டு
அமைதியையும் சமாதானத்தையும்
மரண ஓலங்களுக்கு இடையே தேடியலைகிறார்கள்.
துன்பச்சிலுவை சுமந்திட
அங்கே மீட்பர் என்று
இப்போது யாரும் இல்லை.” -எனும் கவியொருவனின் வரிகள்தான் இப்போது நினைவுக்குவருகின்றன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]