யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கும் கொழும்பு இந்து கல்லூரிக்கும் இடையில் கொழும்பு சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) ஆரம்பமான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கே. பரேஷித் குவித்த அரைச் சதம், ரீ. கஜநாத், கே. தரணிசன், எஸ். பரத்வாசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன முதல் நாள் ஆட்டத்தில் யாழ். இந்து ஆதிக்கம் செலுத்த உதவின.
கொழும்பு இந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 183 ஓட்டங்களுக்கு பதிலளித்த கொழும்பு இந்து 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடும் கொழும்பு இந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். இந்து சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீரர் கே. பரேஷித் 147 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
3ஆவது விக்கெட்டில் எல். பிரியந்தனுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்த பரேஷித், 5ஆவது விக்கெட்டில் எம். கஜனுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
பரேஷித்தை விட துடுப்பாட்டத்தில் எம். கஜன் (28), எஸ். சுபர்ணன் (23), எல். பிரியந்தன் (19), ரீ. ப்ரேமிகன் (13) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைளை பெற்றனர்.
கொழும்பு இந்து பந்துவீச்சில் ஆர். தேஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் எம். அபிஷேக் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆ. டிரோஜன் (17), பி. தாருஜன் (15) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
யாழ். இந்து பந்துவீச்சில் ரீ. கஜநாத் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 11 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கே. தரணிசன் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் எஸ். பரத்வாசன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பலோன் ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட பம்பலப்பிட்டி இந்து, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆர். டிலுக்ஷன் 24 ஓட்டங்களுடனும், எஸ். மிதுசிகன் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
(படப்பிடிப்பு : எஸ். சுரேந்திரன்)