‘விஜய் 60’-ன் தலைப்பு ‘எங்க வீட்டு பிள்ளை’ அல்ல: படக்குழு
‘தெறி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் பரதன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வரும் இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று இருக்கிறது. தற்போது சென்னையில் ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று தலைப்பிடப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தலைப்புக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “’விஜய் 60′ படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது. இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
இப்படத்துக்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.