திருச்சி-சிதம்பரம் சாலையில் வசிக்கும் பிரியா ராஜா என்ற இல்லத்தரசி தயாரித்துள்ள பொன்வண்டு விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்துக்களின் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகரை வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விநாயகர் சிலைகள் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடை வீதியில் திருச்சி-சிதம்பரம் சாலையில் வசிக்கும் பிரியா ராஜா என்ற இல்லத்தரசி தயாரித்துள்ள பொன்வண்டு விநாயகர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
விநாயகர் சிலைகள்
கைவினைப்பொருட்கள் மற்றும் அழகு கலையில் ஆர்வம் கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் போது வித்தியாசமாக விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கடந்த 2008-ல் கொட்டை பாக்கு விநாயகரை தயாரித்து பிள்ளையார் சுழி போட்டார். பின்னர் ஆண்டுதோறும் நவதானிய விநாயகர், பென்சில் துகள் விநாயகர், மாத்திரை விநாயகர், சங்குப்பூ விநாயகர், மக்காச்சோளம் விநாயகர் என விதவிதமாக வடிவமைத்து வழிபட்டார். நடப்பு ஆண்டில் பிரியாவின் எண்ணத்தில் உதித்ததே பொன்வண்டு விநாயகர்.
பொதுவாக விவசாய நிலங்களில் பயிர்களை பாழ்படுத்தும் பூச்சிகளை இந்த பொன் வண்டு தின்றுவிடும். ஆனால் இந்த வண்டு பயிர்களின் இலைகளை தின்பது கிடையாது.
ஆகவே விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் இந்த பொன் வண்டை நாம் பாதுகாத்து இயற்கை விவசாயத்திற்கு நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே பொன் வண்டு விநாயகரை வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இந்த சிலையை வடிவமைக்க கடந்த ஒரு மாத காலமாக தனது குழந்தைகள் உதவியுடன் களி மண்ணை திரட்டி 1,008 எண்ணிக்கையில் பொன் வண்டு உருவம் பதித்து சுமார் 5 கிலோ எடை கொண்டு முழு விநாயகர் சிலை தயாரித்துள்ளேன். நாளை பூஜை செய்ய இருக்கிறேன். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொன் வண்டு விநாயகருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.