தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்தளயில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “உலகின் மிகப் பெரிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகொண்ட விமான நிலையங்கள் தெற்காசியாவில் இரண்டு அல்லது மூன்றே உள்ளன.
அவற்றில் மத்தள விமான நிலையமும் ஒன்று. எனவே குறித்த விமான நிலையம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும். “அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இந்தியாவை சமாதானப்படுத்தவே மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்ய – அதுவும் நட்டத்துக்கு விற்பனை செய்ய – அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்ற கடனைச் செலுத்துவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பதாகக் கூறிய அரசு, மத்தள விமான நிலையத்தை எதற்காக விற்பனை செய்கிறது? “தற்போது 24 பில்லியன் ரூபா செலவிட்டு யுத்தக் கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
யுத்தம் நடைபெறாத நாட்டுக்குக்கு பெரும் தொகை செலவில் யுத்தக் கப்பல் எதற்கு? “நல்லாட்சி அரசாங்கம் கடந்துள்ள ஆயிரம் நாட்களில் மாத்திரம் இரண்டாயிரத்து எழுநூறு பில்லியன் ரூபாவிற்கு அதிகமான கடன்பெற்றுள்ளது. நாட்டின் கடன் சுமையில் 28 சதவீத கடனை நல்லாட்சி அரசாங்கம் குறித்த ஆயிரம் நாட்களுக்குள்ளே பெற்றுள்ளது.” இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தனது பேச்சின்போது தெரிவித்தார்.