பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 100 ஆவது நாளாக தொடர்கின்றன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலின் தென் பிராந்திய நகரங்கள் மீது ஹமாஸ் போராளிகள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தினர். அதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் யுத்தப் பிரகடனம் செய்ததுடன், ஹமாஸின் கட்டுப்பாட்டிலிருந்த பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இம்மோதல்கள் ஆரம்பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் 100 நாட்களாகுகின்றன.
1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மிக நீண்டதும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுமான யுத்தம் இதுவாகும்.
ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் 23,708 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை காஸாவிலிருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சதவீதம் ஆகும்.
அதேவேளை, காஸாவில் சுமார் 80 சதவீதமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதல்களால் இஸ்ரேலில் சுமார் 1140 பேர் கொல்லப்பட்டதுடன், 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸாவிலுள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கினர் பட்டினியால் வாடுகின்றனர் என ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. காஸாவின் 36 வைத்தியசாலைகளில் 16 வைத்தியசாலைகளே அதுவும் பகுதியளவில் இயங்குகின்றன என ஐ.நா. தெரிவித்துள்ளது. மாணவர்கள் பல மாதங்களாக பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
சர்வதேச நீதிமன்ற வழக்கு விசாரணை
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாகக் குற்றம்சுமத்திய தென் ஆபிரிக்கா, காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி, நெதர்லாந்தின் ஹேகு நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இவ்வழக்கின் ஆரம்ப 2 நாள் பகிரங்க விசாரணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நடைபெற்றன.
இவ்வழக்கில் தென் ஆபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழுவுக்கு, தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்டத்துறை பேராசிரியர் கிறிஸ்டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்குகிறார்.
இக்குழுவினர் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் முன்வைத்த சமர்ப்பணத்தில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழியான படையெடுப்பினால் காஸா மக்கள் எதிர்கொண்டுள்ள அவலநிலையை எடுத்துரைத்தனர்.
பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பயங்கரங்கள் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பாகி வருவதாக அயர்லாந்து சட்டத்தரணி பிளின்னே நீ ஹார்லீ கூறியதுடன், காஸாவில் இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கையை நிறுத்துவதற்கு அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இஸ்ரேல் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தென் ஆபிரிக்காவின் இன அழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
இஸ்ரேலிய சட்டத்தரணி டெல் பெக்கர் வாதாடுகையில், இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நடவடிக்கை காஸாவிலுள்ள பலஸ்தீன மக்களை இலக்கு வைக்கவில்லை எனவும் கூறினார்.
ஹமாஸ் இயக்கத்தினர், பெற்றோர்களின் முன்னிலையில் சிறார்களையும் சிறார்கள் முன்னிலையில் பெற்றோர்களையும் சித்திரவதை செய்தனர், மக்களை தீக்கிரையாக்கினர், வல்லுறவுக்குட்படுத்தினர் எனவும் அவர் கூறினார்.
இன அழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அறிவிப்பதற்கு பல வருடங்கள் செல்லும் எனக் கருதப்படுகிறது.
எனினும் காஸாவில் கொலைகளையும் அழிவுகளையும் நிறுத்துவதற்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற தென் ஆபிரிக்காவின் கோரிக்கை தொடர்பிலேயே, நீதிமன்றத்தின் ஆரம்ப விசாரணைகளின் கவனம் குவிந்திருந்தது.
இவ்வழக்கில் இடைக்கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளியிடப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகையில், இன அழிப்பு தொடர்பான இறுதித் தீர்ப்பை இந்நீதிமன்றம் தற்போது அறிவிக்கத் தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்றுக்கொண்டு இதில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியும் என்றார்.