கடந்த 10 வருடங்களாக அரசியல் கைதியாக இருந்த முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் (வயது 70) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களைப் பெற்றுக்கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு மாசி மாதம் 10ஆம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டார். கொழும்பு மகசீன் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தேவகனின் வழக்கு நீர்கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. கடந்த வருடம் குறித்த குற்றச்சாட்டுக்காக தேவகனுக்கு இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை விதித்தது நீதிமன்று. எனினும் சட்டா அதிபரால் அவர் மீது மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வெடி பொருள்களை வைத்திருந்தார் என்று அதில் குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
அதன் பின்னரே தேவகன் சோர்வுற்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 10 நாள்களுக்கு முன்னர் தேவகன் சிறைச்சாலையில் மயக்கமுற்றார். வெலிக்கடை சிறைச்சாலையின் மருத்துவ சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தேவகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 12ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கேயே நேற்று உயிரிழந்துள்ளார்.