மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இது. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாதம் கடைசியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், கடந்த ஆண்டு முதல் பிப்ரவரி 1-ம் தேதியிலேயே தாக்கல் செய்யப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பட்ஜெட்டில் ஏராளமான புது அறிவிப்புகள் வந்துள்ளன. குடியரசுத் தலைவர், ஆளுநர் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. கல்விக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதாரம் தொடர்பாகவும் ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளான, டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூபாய் 500 உதவித் தொகை வழங்குவதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள், 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்ட உதவி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.