டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹீனா சித்துவுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஜிது ராய் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுதி சுற்று ஆட்டத்தில் பங்கேற்றார்.
இதில் ஜிது ராய் 9-வது இடத்தையே பிடித்தார். இதனால் அவர் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். தகுதி சுற்றில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிது ராய், தகுதி சுற்றில் 572 புள்ளிகள் சேர்த்தார். ஜப்பானின் மட்சுடா டாம்யூகி, ஜிது ராயைவிட கூடுதலாக ஒரு புள்ளி சேர்த்து கடைசி வீரராக இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.
எனினும் இறுதி சுற்றில் அசத்திய மட்சுடா 241.8 புள்ளிகளுடன், தங்கப் பதக்கம் வென்றார். உக்ரைனின் பாவ்லோ கொரோஸ்டிலோவ் (241.1 புள்ளிகள்) வெள்ளிப் பதக்கமும், அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரரான ஓமெல்செக் (218.8 புள்ளிகள்) வெண்ககலப் பதக்கமும் கைப்பற்றினர்.
மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்றில் இந்தியாவின் பூஜா 9-வது இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் மொத்தம் 412.4 புள்ளிகள் சேர்த்தார்.
இறுதி சுற்றில் செர்பியாவின் அன்ட்ரியா அர்சோவிச் 251.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். 249.7 புள்ளிகள் சேர்த்த ருமேனியாவின் லாரா கோமன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் பெங்க் 228.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.