உணவுப்பொருளுக்காக பாகிஸ்தானில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்த விளம்பரம், சமூக வலைதளங்களில் அதிக
ரசிகர்களைப்பெற்றுள்ளது.
ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம். அதிலும், அந்தத் தாய் வேலைபார்த்துக்கொண்டே தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பது அதைவிடக் கஷ்டமான செயல். தனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரு தாய் தன் குழந்தையை எப்போதும் கவனிக்க மறப்பதில்லை.
இந்தச் சிறிய கருத்தை மையமாகக்கொண்டு, பாகிஸ்தான் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்று, ஒரு விளம்பரத்தை
உருவாக்கியுள்ளது. இந்த விளம்பரம், சமூக வலைதளங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய கப் கேக் விளம்பரம்தான் அது. ஒரு வீட்டில் வேலைக்குச் செல்லும் தாய், தனது மகனுக்கு உணவு எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார். அப்போது அந்தச் சிறுவன், தன் தாயிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல வருகிறான். ஆனால், தாயால் அதைக் கேட்க முடியவில்லை. மிகவும் அவசரமாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறாள். மனமுடைந்த அந்தச் சிறுவன், பள்ளிக்குச் சென்றுவிடுகிறான். பள்ளியில் அவனுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. மதிய உணவுடன் ஒரு கப் கேக் மற்றும் சிறு துண்டுச்செய்தியையும் சேர்த்து, அவனுக்கு தாய் அனுப்புகிறாள். அதில், ‘நான் உன்னுடைய கருத்தை எப்போதும் கேட்பேன்’ என எழுதியிருந்தது. இதே போன்று, ஒவ்வொரு சம்பவம் நிகழும்போதும், தனது தாயிடம் இருந்து கப் கேக்குடன் சேர்த்து ஒரு செய்தி வருகிறது.
இறுதியில் அந்தச் சிறுவன், தாய்க்கு ஒரு செய்தி அனுப்புகிறான். அதுவே, இந்த மொத்த விளம்பரத்தில் மனதைக் கவரும் மிகச் சிறந்த இடம். அவன் அனுப்பிய அந்தச் செய்தியில், ‘இது வெறும் சிறிய விஷயம். ஆனால், பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டது’ என எழுதியிருப்பான். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் இதுவரை 63,000 பேர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்ந்த அனைவரும், இந்த விளம்பரம் தன் மனதைத் தொட்டுவிட்டதாகத் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.